திமுக ஊழல் பட்டியலை வெளியிடுகிறேன் : அண்ணாமலை அறிவிப்பு

bjpanna

தி.மு.க.வினரின் ஊழல் பட்டியல் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிடப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறி இருந்தார். இது தொடர்பாக, கடந்த மாதம் தென்காசியில் நடந்த கட்சி கூட்டத்தில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டிருந்தார்.

தி.மு.க. முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தற்போதைய அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் 27 பேரின் ஊழல் பட்டியல் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ந்தேதி வெளியிடப்படும். ரூ.2 லட்சத்து 23 ஆயிரம் கோடி அளவுக்கு அவர்கள் ஊழல் செய்து சொத்துக்களை குவித்துள்ளனர்.

இதனை நான் வெளியிடும் போதுதான் தமிழ் மக்கள் அதனை புத்தாண்டாக கொண்டாடுவார்கள் என்றும் அண்ணாமலை பரபரப்பான தகவல்களை கூறி இருந்தார். இதன்படி, நாளை காலை 10.15 மணிக்கு தி.மு.க.வினரின் ஊழல் பட்டியலை வெளியிடப்போவதாக அண்ணாமலை இன்று டுவிட்டரில் பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இன்று காலை 9.37 மணி அளவில் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் தி.மு.க. பைல்ஸ் என்கிற தலைப்போடு வெளியிட்டிருக்கும் வீடியோவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதி மாறன், அமைச்சர் உதயநிதி, மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா, மு.க.அழகிரியின் மகன் துரை உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

அதில் ஏப்ரல் 14 காலை 10.15 மணி என்றும் அண்ணாமலை பதிவிட்டு உள்ளார். நாளை காலை டுவிட்டர் இணைய தளம் மூலமாக தி.மு.க.வினரின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்பதை அண்ணாமலை இன்றே அறிவித்திருப்பது அரசியல் களத்தில் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 
 

Share this story