ராகுல் காந்தி தேர்தல் களத்திலேயே இல்லை; மோடி 3.0 உறுதி - அரசியல் விமர்சகர் ஸ்ரின் திட்டவட்டம்..

By 
modirahul3

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் சூறாவளி பிரச்சாரம் செய்துவரும் பிரதமர் மோடியுடன் ஒப்பிடும்போது, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தேர்தல் களத்திலே இல்லை என்று அரசியல் விமர்சகர் ஸ்ரின் கூறியுள்ளார். இந்த மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜக அரசுக்கு சவாலே இல்லாததால், மீண்டும் மோடி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

2024 மக்களவைத் தேர்தல் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்ரின், "மக்களவைத் தேர்தல் மோடி மீண்டும் ஆட்சி அமைப்பார், மூன்றாவது முறையாக பிரதமாக பதவியேற்பார் என்ற எதிர்பார்ப்புடன் தொடங்கியது. பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் இடங்களின் எண்ணிக்கை குறித்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. கணிப்புகள் இடையே வேறுபாடுகள் இருந்தாலும், எல்லா கணிப்புகளும் மோடி 3.0 உறுதி என்று கூறுகின்றன" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, ஆளும் கட்சிக்கு எதிராக வலுவான பிரச்சாரத்தை முன்னெடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகளை விமர்சித்துள்ள ஸ்ரின், "மிகப் பெரிய சவாலாக இருக்க வேண்டிய ராகுல் காந்தி என்ன செய்தார் என்பதைப் பாருங்கள்... அவர் கிட்டத்தட்ட ஒன்றுமே செய்யவில்லை!" என்று சாடியுள்ளார்.

பிரதமர் மோடியின் பிரச்சாரம் பற்றிக் கூடும் ஸ்ரின், "தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு, பிரதமர் மார்ச் மாதத்தில் 9, ஏப்ரல் மாதத்தில் 68, மே மாதத்தில் 26 பிரச்சார நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். இதற்கு நடுவிலும் பிரதமர் மார்ச் மாதத்திலிருந்து இதுவரை 24 நேர்காணல்களை வழங்கியிருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.

தேர்தலை ஒட்டி பிரதமர் மோடியின் நேர்காணல்கள் பிராந்திய ஊடகங்கள், தேசிய ஊடகங்கள் மற்றும் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ளன என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறார். இத்துடன் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து 21 ரோடு ஷோ நிகழ்ச்சிகளையும் செய்துள்ளார் என்றும் கோவில்கள் மற்றும் குருத்வாராக்களுக்குச் சென்று தரிசனம் செய்து, சாதாரண குடிமக்களையும் சந்தித்துப் பேசியுள்ளார் என்றும் ஸ்ரின் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து மோடியின் பிரச்சாரத்தை ராகுல் காந்தியின் பிரச்சாரத்துடன் ஒப்பிட்டுள்ள ஸ்ரின், "மார்ச் 17 அன்று பாரத் ஜோடோ நியாய யாத்திரை முடிவடைந்தது. அன்று முதல் மே 8 ஆம் தேதி வரை 39 பொதுக்கூட்டங்களில் ராகுல் காந்தி உரையாற்றினார் இதில் மார்ச் மாதம் 1, ஏப்ரலில் 29, மே மாதம் 10 ஆகியவை அடங்கும். இந்தக் கூட்டங்களில் பெரும்பாலானவை காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு குறைவாகவோ அல்லது வெற்றியடையாத இடங்களிலோ நடந்துள்ளன (உதாரணமாக பிந்த், கேந்த்ராபாரா)" என்று தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி தேர்தல் தொடங்கியதில் இருந்து ஊடகங்களுக்கு பேட்டியே அளிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள ஸ்ரின், நியாய யாத்திரை மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளுடன் சில செட்-அப் செய்தியாளர் சந்திப்புகள் மட்டுமே நடந்துள்ளன என்றும் குறை கூறியிருக்கிறார்.

இரண்டு முறை ஆட்சியில் இருந்த பாஜகவுடன் ஒப்பிடும்போது காங்கிரஸ் மூன்று மடங்கு குறைவான அளவுக்கே பிரச்சாரத்தில் கவனம் செலுத்தியுள்ளது என்று சொல்லும் ஸ்ரின், தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தால் அது எப்படி பொதுவெளியில் ஊடகங்களின் கவனத்துக்கு செல்லாமல் இருக்கும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராகுல் காந்தி களத்திலே இல்லாதது ஏன் எனவும் கட்சிக்கு ஏற்படும் சேதாரத்தை மட்டுப்படுத்த காங்கிரஸ் அவரை மறைத்து வைக்கிறதா எனவும் ஸ்ரின் கேள்வி எழுப்புகிறார். மக்களவைத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு சவாலே இல்லாத நிலை உள்ளது என்றும் அவர் கருதுகிறார்.

Share this story