ராகுல் பாதயாத்திரை நிறைவு : நிகழ்வுகள் விவரம்..
 

By 
end

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து பாரத ஒற்றுமை பாத யாத்திரையை தொடங்கினார்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபயணம் மேற்கொண்ட பிறகு அவர் இறுதிகட்டமாக ஜம்மு காஷ்மீரில் முகாமிட்டு உள்ளார்.

ராகுல்காந்தி ஸ்ரீநகரின் பாந்தா சவுக் பகுதியில் நேற்று பாதயாத்திரையை தொடங்கினார். கோன்வார் வரை 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு வழி நெடுகிலும் உள்ளூர் மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ராகுல் காந்தியின் பாத யாத்திரை ஸ்ரீநகரில் இன்றுடன் நிறைவு பெறுவதாக இருந்தது.

இறுதி நாளில் லால்சவுக் பகுதியில் தேசிய கொடியேற்ற அவர் திட்டமிட்டு இருந்தார். ஆனால் பாதுகாப்பு காரணங்களால் ஒரு நாள் முன்கூட்டியே அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ராகுல்காந்தி நேற்று பாத யாத்திரையை நிறைவு செய்தார்.

லால் சவுக் மணிக்கோபுரத்தில் அவர் தேசிய கொடியை ஏற்றினார். அதோடு அவரது பாத யாத்திரையும் நேற்றுடன் நிறைவு பெற்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மக்கள் ஜனநாயக கட்சி யின் தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியுமான மெகபூபா முப்தி இது தொடர்பாக டுவிட்டர் பதிவில் கூறும் போது,

"1948-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் நேரு ஸ்ரீநகர் லால் சவுக்கில் தேசிய கொடியேற்றினார். தற்போது ராகுல் காந்தி தேசிய கொடி ஏற்றியுள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார். ராகுல்காந்தி 12 மாநிலம் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 4080 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டார்.

அவர் 400 இடங்களில் மக்களுடன் கலந்துரையாடினார். 12 பொதுக்கூட்டத்தில் பேசினார். இந்த பாதயாத்திரையின்போது நிருபர்கள் சந்திப்பு 13 முறை நடைபெற்றது. முக்கிய பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள் என பல தரப்பிலும் ராகுல்காந்தி பாதயாத்திரையில் பங்கேற்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ராகுல் காந்தியின் அதிகாரபூர்வ பாத யாத்திரை நிறைவு விழா ஸ்ரீநகரில் இன்று நடைபெற்றது. அங்குள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் விழா நடந்தது. அங்கிருந்து ராகுல்காந்தி பொதுக்கூட்டம் நடைபெறும் ஸ்டேடியத்துக்கு பேரணியாக சென்றார். 

Share this story