வயநாட்டில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார் ராகுல்..

By 
vayaaa

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும், ஜூன் 1ஆம் தேதி கடைசி மற்றும் 7ஆம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறவுள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அதன் முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்படவுள்ளன.

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகளை கொண்ட கேரள மாநிலத்துக்கு வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்  தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை நண்பகல் 12 மணிக்கு (ஏப்ரல் 3ஆம் தேதி) வயநாட்டில் வேட்புமனுத்தாக்கல் செய்யவுள்ளார். அவர் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் உடனிருப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

காங்கிரஸின் கோட்டையான வயநாடு மக்களவைத் தொகுதி 2009ஆம் ஆண்டு முதல் அக்கட்சியின் வசம் உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வயநாட்டில் வெற்றி பெற்று சிட்டிங் எம்.பி.யாக உள்ளார். அந்த தேர்தலில் 4.31 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றிருந்தார். அதேசமயம், அமேதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் அவர் தோல்வியடைந்தார்.

எதிர்வரவுள்ள மக்களவைத் தேர்தல் 2024இல் ராகுல் காந்திக்கு மீண்டும் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட அக்கட்சி மேலிடம் வாய்ப்பளித்துள்ளது. ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பாக அக்கட்சியின் கேரள மாநில தலைவர் சுரேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜா ஆகியோர் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடவுள்ளனர்.

Share this story