இதை ஒரு முறை வாசிங்க, ஒரு கணம் யோசிங்க : ஓபிஎஸ் தரப்பு அன்பு வேண்டுகோள்   

marudhu123

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ்; ஒன்றரைக்கோடி தொண்டர்களின் கவனத்திற்கும், கட்சி நலன் கருதி வெளியிட்டுள்ள நிதர்சன அறிக்கை வருமாறு :

'எடப்பாடியிடம்தானே முன்னாள் அமைச்சர்கள் உட்பட நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் என எல்லோரும் உறுதியாக நிற்கின்றளர் என்ற கேள்வி பலராலும் கேட்கப்படுகிறது.

உண்மைதான், அம்மா இருக்கும்வரை விடியும்போது அமைச்சராக இருப்போமா என்னும் அச்சத்தோடே தூங்கி எழுந்தவர்கள்.. சுதந்திரமாக காசு பணம் குவிக்க முடியலையே என அன்று கலக்கமுற்றவர்கள்...

சம்பாதித்ததை எல்லாம் கண்டுபிடித்து, பறித்துக்கொண்டு விடுவார்களோ என்று படபடப்போடே நாட்களை நகர்த்தியவர்கள்.. அம்மா கோட்டைக்கு வரும்போதும், கோட்டையில் இருந்து புறப்படும்போதும், முதுகை அரைவட்ட வடிவில் வளைத்து கும்பிடுவதையே கால அட்டவணையாக கொண்டு கஷ்டப்பட்டவர்கள்..   

உழைத்து (?) குவிப்பதை எல்லாம் "பார்ட்டி ஃபண்ட் "என  கொட்டி அழுகிறோமே என்று உள்ளுக்குள் புழுங்கியவர்கள்.. அத்தனை பேருக்கும் அம்மா மரணத்துக்குப் பின், பூரண விடுதலை தந்து, ஒவ்வொரு அமைச்சரையும் குறைந்த பட்சம் ஐநூறு கோடி ரூபாய்க்கு அதிபதிகள் ஆக்கிவிட்ட ஒரே குபேரக் கடவுள் எடப்பாடி என்றால், அதனை ஒருவராலும் மறுக்க முடியாது.

உளவுத்துறையின் ஒருவரி ரிப்போர்ட்டில், தங்கள் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு விடுமோ என்றஅச்சத்திலேயே கிடந்த மாவட்டச் செயலாளர்களுக்கும் பூரண சுதந்திரம் பெற்றுத் தந்த 'மகாத்மா காந்தி?' எடப்பாடிதான்.

ஓ.பி.எஸ். ஸுக்கு முதல்வர் நாற்காலி தரப்பட்டபோது, அதனை வழங்கிய அம்மா.. அருகிலேயே இருந்து கவனித்த வண்ணம் இருக்க, எடப்பாடிக்கோ ஆட்சி அமைக்க காரணமான அம்மாவும் உயிரோடு இல்லாத நிலையில்..முதல்வர் நாற்காலியை கூவத்தூரில் குத்தகை எடுத்துக்கொடுத்த சசிகலாவும் சிறைக்குப் போய்விட,

கூடவே.. சசிகலா நியமித்துப்போன தினகரனும் திகாருக்குப் போய்விட, எடப்பாடிக்கோ கோல்கீப்பர் இல்லாத மைதானத்தில் கால்பந்து ஆடுபவருக்கான அமோக வாய்ப்பு கிடைத்தது. வரலாறு காணாத அளவுக்கு வருவாய் பெருமழை அவரிடம் கொட்டியது. சம்பந்திகள் சகிதமாக சூறையாடல் தொடங்கியது.

பொதுப்பணி, போக்குவரத்து, நெடுஞ்சாலை, உள்ளாட்சி, மின்சாரம், டாஸ்மாக், சுற்றுச்சூழல், கல்வி உள்ளிட்ட பணமழை பொழியும் ஏ.டி.எம். துறைகளோடு..

கனிமவளம், மணல், நிலக்கரி இறக்குமதி என தங்கள் வசப்பட்ட முக்கிய இலாக்காக்களை முன் வைத்து சூறாவளிச் சுருட்டல்கள் சுனாமி வேகத்தில் நடந்தன.

எடப்பாடி வகையறாக்கள் மட்டுமன்றி, எல்லா மந்திரிகளும் கொள்ளையோ கொள்ளை என கும்மியடித்து குவித்தனர். எங்கள் குலசாமியே எடப்பாடிதான் என்னும் அளவுக்கு உள்ளத்தில் கோவில் கட்டி உருகினர். தங்கள் பங்குக்கு மாவட்டச் செயலாளர்களும், லகான் இல்லா குதிரைகளாக துள்ளிக் குதித்த வண்ணம் அள்ளிக் குவித்தனர்.

வீட்டுக்காரன் தயவிருந்தா விடிய விடிய திருடலாம் என்பதுபோல், நாட்டை ஆளும் பா.ஜ.க.கூட்டணி கட்சியாக இருக்கவே, வாத்தியாரோடு சேர்ந்து மது அருந்தும் மாணவன் போல, துளியளவு பயமும் இல்லாமல்... எடப்பாடியின் அலிபாபா கம்பெனி ஆடித் தீர்த்தது.

கூடவே, மத்திய பா.ஜ.க. அரசின் முக்கிய முடிவுகள் தீர்மானங்கள் சட்டத் திருத்தங்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் அரோகரா பாடுகிற கட்சியாக அண்ணா தி.மு.க.வின் பாராளுமன்ற நடவடிக்கைகள் அமைந்தன.

வெகு சில தருணங்களில், மத்திய ஆட்சியாளர்களுக்கு கோபம் வந்தபோதெல்லாம், நிதியை கொண்டும் ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டும் அவை சமாதானம் செய்யப்பட்டது.

இப்படியாக எடப்பாடியின் ஆட்சி வரலாறு காணாத அளவில் அறுவடை நடத்த.. கூடவே கொரானாவும் எடப்பாடியின் கல்லாவை ஏகத்துக்கும் நிரப்பியது. கோடநாட்டில் தூரு வாரியதும் கூடச் சேர்ந்துவந்து குவிந்தது.

அதே வேளையில், கொரானா உதவி என்றும், பொங்கல் பரிசும் என்றும் ரொக்கத்தை வைத்து மக்களையும் எடப்பாடி குளிர்விக்க தவறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியாக, எடப்பாடி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மாவட்டச் செயலாளர்கள் எல்லாம் தானியக்கிடங்குக்குள் குடியேறிய பறவைகளாக, தீனிகளில் திளைத்திருந்த அந்த பொற்காலத்தை தங்களுக்கு தந்த எடப்பாடிதான், எங்களுக்கு எம்.ஜி.ஆருக்கும் மேலானவர், அம்மாவைவிட அபாரமானவர் என  அவர்கள் ஆலவட்டம் வீசுவதில் ஆச்சரியம் இல்லையே.

அவர்களை பொறுத்தவரை, தி.மு.க.ஆட்சிக்கு எதிரான மக்களின் கோபம் தங்களுக்கு இன்னொரு முறை லட்டு தின்ன வாய்ப்பு தரும் என வாய் பிளந்துகொண்டு திரிகின்றனர்.

ஆனால், பிளவு மேல் பிளவு என்பது இயக்கத்தை சுகவீனப்படுத்தி தி.மு.க.வுக்கு அது தொடர் வாய்ப்புகளை தந்து விடும் என்பதை உணராமல், எடப்பாடியின் முட்டாள்தனத்துக்கு முட்டுக்கொடுத்து வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுக்குப் பிறகும், எடப்பாடியை நம்புகிற அவர்களின் மடத்தனம் என்பது
கொள்ளைக் கூட்டத்தலைவன் மீது இருக்கும் அல்லக்கைகளின் பாசமே தவிர, அதில் அரசியல் முதிர்ச்சி என்பது கடுகளவும் இல்லை என்பதே உண்மை..அதற்காக, கண் முன்னே கழகம் அழிவதை கண்டும் காணாமல் தொண்டர்களால் கடந்துபோக முடியாதே..

ஆம்...இடி அமீன் எடப்பாடியின் அபகரிப்பை முறியடித்து, அண்ணா தி.மு.க.என்னும் மக்கள் திலகம் உருவாக்கிய தொண்டர்களின் இயக்கத்தை  காத்திட உறுதி ஏற்போம்.

அழுக்குகளை, இழுக்குகளை அகற்றி சுத்தகரிக்கப்பட்ட கட்சியாக அண்ணா தி.மு.க. வை மீட்டெடுக்க, குருதியில் உறுதி கலந்து சபதமேற்போம்.

'அம்மா நம் உலகம், அவர் அடையாளம் காட்டிய ஓ.பி.எஸ் தான் கழகம்.' என்பதை உள்ளத்தில் நிறுத்தி ஒன்றரைக் கோடி தொண்டர்களும் ஒன்றாகுதல் காண்போம்.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

 

Share this story