தேர்தலில், தம்பி விஜய்யுடன் கைகோர்க்க தயார்: சீமான் அறிவிப்பு..

By 
seemanvi

வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தவெக தலைவர் விஜய்யுடன் வாய்ப்பு அமைந்தால் ஒன்று சேர தான் காத்திருப்பதாகவும், தவெக சார்பில் நடைபெறும் மாநாட்டுக்கு அழைப்பு வந்தால் செல்வேன் என்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,

“கோயில், சாமி, சாதி, மதம் ஆகியவற்றை மட்டுமே பேசிக்கொண்டு இன்னும் எத்தனை காலத்துக்கு ஜெயிக்க முடியும். பாஜகவால் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் செய்த ஒரு சாதனையைக் கூட சொல்லி மக்களிடம் ஓட்டு கேட்க முடியவில்லை. அதற்கு பதிலாக காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கோயிலை இடித்துவிடுவார்கள், முஸ்லிம்களுக்கு அனைத்தையும் வாரி வழங்கிவிடுவார்கள் என பிரதமர் தனது பிரச்சாரத்தில் பேசிக் கொண்டிருக்கிறார். இது ஒரு தலைவருக்கு அழகல்ல.

இதைப்பற்றி மட்டுமே சிந்திப்பவர்கள் மக்களைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள். பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தால் கேஜ்ரிவால் கூறியதை போல முதல்வர்கள் ஸ்டாலின், மம்தா, பினராயி விஜயன் போன்றோரின் கைது உறுதியாக நடக்கும். சமூகத்தில் எதைப் பற்றியும் யோசிக்காமல் எதை வேண்டுமானாலும் பேசிவிட்டு சென்றுவிடுகின்றனர்.

தமிழக காவல்துறை ஏடிஜிபி அருணுக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். தன் தந்தையைப் பற்றி தவறாக பேசுவதை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள்? எனவே யூடியூபர் சவுக்கு சங்கர் பேசியது தவறு.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடக்கும் மாநாட்டுக்கு அழைப்பு வந்தால் நிச்சயம் செல்வேன். 2026-ல் விஜய்யுடன் ஒன்று சேர வாய்ப்புஅமையுமானால்  அதற்காக காத்திருக்கிறேன். அண்ணனும், தம்பியும் சந்திப்பது வழக்கம். அப்படித்தான் நானும் விஜய்யும் சந்தித்து கொள்கிறோம்.

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பதம்பூஷண் விருதுபெற தகுதியான நபர். ஒரு கட்சியின் தலைவர் அல்லது நடிகராக மட்டுமின்றி அவர் ஒரு நல்ல மனிதர். எனவே விஜயகாந்த் உயிருடன் இருக்கும்போதே பதம்பூஷண் விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும். இப்போது கொடுத்ததில் பயனில்லை” என்றார்.

Share this story