எடப்பாடியின் அபகரிப்பு அரசியலை கண்டித்து, சிவகங்கையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்..

marudhu142

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

புரட்சித் தலைவரின் சட்ட விதிகளை மதிக்காமல் பொதுச்செயலாளர் என சுயபட்டாபிஷேகம் நடத்திக் கொண்ட எடப்பாடியை கண்டித்து.. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிவகங்கை மாவட்டக் கழகம் சார்பில் 06-04-2023 அன்று சிவகங்கையில் நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

தீர்மானம் எண் 1.

ஒரு தொண்டனும் தலைமைக்கு போட்டியிட முடியும்.. தொண்டர்கள் மட்டுமே கட்சியின் தலைமையை தேர்ந்து எடுக்க வேண்டும் என்னும்  கழக நிறுவனர் புரட்சித் தலைவர்  எம். ஜி.ஆர் வகுத்துக் கொடுத்த கட்சியின் மாற்றக் கூடாத  அடிப்படை சட்டவிதிகளை துச்சமென தூக்கி எறிந்து விட்டு,  பொதுக்குழு என்னும் புறவாசல் வழியே கட்சியை அபகரிக்கவும்..

அம்மாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடியின் கொத்தடிமைகளாகவும் ஏறத்தாழ பினாமிகளாகவும் மாறிவிட்ட மாவட்டச் செயலாளர்களை 
வைத்துக் கொண்டு அண்ணா தி.மு.க.வின் அதிபராக தன்னை பிரகடனம் செய்து கொள்ள
முயற்சிக்கிற அபகரிப்பு பழனிச்சாமியின் அருவருப்பான ஜனநாயக விரோத போக்கை,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிவகங்கை மாவட்டக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

மேலும், தொண்டர்களின் உரிமையை பறித்து அதனை ,அந்த உரிமையை.. தான் கொள்முதல் செய்து வைத்திருக்கும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கட்சியின் விதிகளுக்கு மாறாக எடப்பாடி மடைமாற்றம் செய்வதை இக் கூட்டம் கடுமையாக எதிர்க்கிறது.

தீர்மானம் எண் 2.

கழகத்தின் அடிப்படை தொண்டர்களால் தேர்வு செய்யப் பட்ட கழக ஒருங்கிணைப்பாளர் பதவிகள் 2026 டிசம்பர் வரைக்குமான ஆயுட் காலத்தைக் கொண்டிருக்கும் நிலையில் அந்த தொண்டர்களின் தேர்வை திடீரென கருக்கலைப்பு செய்துவிட்டு, எடப்பாடி தன்னை பொதுச் செயலாளராக அறிவித்துக் கொண்டிருப்பது ஜனநாயகத்தை  காலில் போட்டு, மிதிக்கிற காட்டுமிராண்டித் தனமாகும்.

இதற்கு, எம்.ஜி.ஆரின் சட்டவிதிகளை சரிவர உள்வாங்கிக் கொள்ளாத நீதிமன்ற தீர்ப்புகளையும், தனது கத்தைப் பணத்தால் வளைத்து வைத்திரும் மாவடச் செயலாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் என்கிற நிர்வாக ரீதியிலான எண்ணிக்கை பெரும்பான்மையையும் ஊர் உலகுக்கு காட்டி, எடப்பாடி தப்பிக்க பார்ப்பது  கைதேர்ந்த ஒரு ஜனநாக கொள்ளையாகும்.

மேலும், தலைமைப் பதவிக்கு தன்னைவிட தொண்டர்கள் செல்வாக்கும் அம்மாவின் அபிமானமும் அவராலான அடையாளமும் கொண்டிருப்பவர் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பி.எஸ் என்பதற்காகவே, அவரை கட்சியில் இருந்தே நீக்குவதாக எடப்பாடி அறிவித்து விட்டு  தன்னை பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்துவிட்டதாக அறிவித்துக் கொள்வது, கோல்கீப்பரை கட்டிப் போட்டு விட்டு கோல் அடித்து மகிழுகிற மனநோயாளித்தனமாகும்.

எனவே, எடப்பாடியின் இத்தகையை கட்சியின் விதிகளுக்கும் தருமத்துக்கும் எதிரான முறைகேட்டு முடிசூட்டலை நிராகரிப்பதோடு அவரது நீதிக்கு புறம்பான அபகரிப்பை சிவகங்கை மாவட்ட கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

தீர்மானம் எண் 3.

மைதானத்தில் உள்ள நடுவர்களின் முடிவுகள், பல தருணங்களில் தவறாகி விடும்போது மூன்றாம் நடுவரின் பார்வைக்கு அது முன்னெடுக்கப்பட்டு சாட்சிகளோடும் காட்சிகளோடும் தெளிவான முடிவை  அந்த மூன்றாம் நடுவர் வழங்குவது விளையாட்டில் மட்டுமல்ல, அரசியலிலும் உண்டு என்பதை நம்பிக்கையாக கொண்டு நீதிமன்றம் தேர்தல் ஆணையம் இதனைக் கடந்த மூன்றாம் நடுவராக மக்கள் மன்றத்தையும்  உளமார ஏற்று, எடப்பாடியின் சதிகளையும் எம்.ஜி.ஆரின் விதிகளையும் முன்வைத்து அந்த  மூன்று களங்களிலும்  அபகரிப்பு எடப்பாடிக்கு எதிராக அயராது போராடி வருகிற தொண்டர்களின் உரிமைக்காவலர் மாண்புமிகு முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பி.எஸ் அவர்களுக்கு சிவகங்கை மாவட்டக் கழகம் தனது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 4.

காலமகள் தந்திட்ட கோலமகள் குடியிருந்த கொடநாடு  கோவிலில் நடந்த கொலை கொள்ளை விவகாரங்களை ஆட்சிக்கு வந்து தொன்னூறு நாட்களுக்குள் குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி  அவர்களை தண்டிப்போம் என்று தனது தேர்தல் அறிக்கையிலேயே அச்சிட்டு கொடுத்த தி.மு.க.ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், இன்று வரை விசாரணை அமைப்புகளின் மாடங்களும் முகவரிகளும் மாறுகிறதே தவிர வேறு எந்த முன்னேற்றமும் இருப்பதாக தெரியவில்லை.

மேலும், ஆளும் தி.மு.க. கொடநாடு கொலை கொள்ளை விவகாரத்தை தனது அரசியல் பேரங்களுக்கான திரைமறைவு ஆயுதமாக பயன்படுத்தி வருகிறதோ என்கிற சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.எனவே, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கொடநாடு கொலை கொள்ளை வழக்கின் விசாரணை நிலை என்ன என்பதை பெற்று, இவ்வழக்கை சி.பி.ஐ.வசம் ஒப்படைக்க வேண்டும் என்னும் கோரிக்கையை நீதி மன்றத்தின் மூலம் முன்னெடுக்க சிவகங்கை மாவட்டக் கழகம் தலைமையின் அனுமதியை பெற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 5.

ஆன்லைன் ரம்மி என்கிற வலைதளச் சூதாட்டம் ஏராளமான உயிர்களை காவு வாங்கி வருவதை முன்வைத்து அதனை தமிழகத்தில் தடைசெய்ய வேண்டி தமிழக சட்டமன்றத்தில் ஆளும் அரசு கொண்டு வந்த தீர்மானத்தின் மீது முன்னாள் முதலமைச்சரும் கழக ஒருங்கிணைப்பாளருமான மாண்புமிகு ஓ.பி.எஸ். உரையாற்றியதற்காக சட்டமன்றத்தில் எடப்பாடியும் அவரது தூண்டுதலின் பேரில் அவரது அபகரிப்பு கும்பலும் ஓ.பி.எஸ் அவர்களை பேச அனுமதித்தது தவறு என சண்டியர் தனத்தில் ஈடுபட்டது கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழக முதல்வராக மூன்று முறை அம்மாவின் ஆட்சியை நடத்திய பெருமையும் அனுபவமும் கொண்ட முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.
அவர்களை பேசக்கூடாது என ஆட்சேபம் தெரிவிப்பதற்கு முதலமைச்சர் பதவியை கூவத்தூரில் குத்தகை எடுத்த எடப்பாடிக்கு அருகதை கிடையாது.

எனவே, மாண்புகள் ஏராளம் கொண்ட சட்டசபைக்குள் தனது அல்லக்கைகளை ஏவி விட்டு, எடப்பாடி கும்பல் ரவுடித்தனத்தில் ஈடுபட்டதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

தீர்மானம் எண் 6.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை கொள்ளைப் பணத்தை கொண்டு கொள்முதல் செய்து அபகரித்து விட்டதாக கொக்கரிக்கும் எடப்பாடி.. கழக நிறுவனர் எம்.ஜி.ஆர் வகுத்த கட்சியின் சட்ட விதிகளின் மீது மலர்வளையம் வைத்து விட்டு,தான் பொதுச் செயலாளர் ஆகிவிட்டாதாக மலர் செண்டுகளை வாங்கித் திரிகிறார்.

மேலும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைப் போல தொப்பியும் கண்ணாடியும் போட்டுக் கொண்டும் அரசியல் அருவருப்பின் உச்சம் தொட்டு நிற்கிறார். இந்த அபகரிப்பு அசிங்கத்திற்கு தொண்டர்களின் எதிர்ப்பை காட்டும் விதமாகவும் புரட்சித் தலைவர் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது பிறந்த நாள் மற்றும் கழகத்தின் பொன்விழா ஆகியவற்றை கொண்டாடும் விதமாகவும்,

அ.தி.மு.க. சார்பில் விரைவில் நடக்க இருக்கும் முப்பெரும் விழா மாநாட்டில் சிவகங்கை மாவட்டத்தின் சார்பில் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பத்தாயிரம் தொண்டர்களோடு கலந்து கொள்வது என  சிவகங்கை மாவட்டக் கழகம் முடிவெடுத்துள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 7.

கட்சியின் விதிகளை தனி ஒருவரின் அதிகாரப் பித்துக்காக திருத்துவது. கட்சியை நிறுவிய மக்கள் திலகம் எம்ஜிஆர் சொன்ன மாற்றக் கூடாத விதிகளை மாற்றி, தொண்டர்களின் உரிமையை பறிப்பது.. பொதுக்குழுவில் பொறுக்கிளை கலந்து விட்டு ஒரு முன்னாள் முதலமைச்சரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஒருவர் மீதே தண்ணீர் பாட்டில்களை வீசி தாக்க முயற்சிப்பது..

தலைமைக் கழகத்திற்கு வரும்போது ஆறு மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் குண்டர்களை வைத்து தாக்குதல் நடத்துவது..காசை வைத்து கட்சியை அபகரிப்பது என ஜனநாயகத்திற்கு எதிரான அரசியலை முன்னெடுத்து தொண்டர்களின் உரிமையை பறிக்கும் எடப்பாடியின் அரசியலை அங்கீகரிப்பதும்  ஆக்ரமிப்பு காஷ்மீரை அங்கரீப்பதும்  ஒன்று தான் என்பதால், இது போன்ற பட்டப் பகல் அபகரிப்புகளை தடுக்காமல் விட்டால்  ஏராளமான எடப்பாடிகள் ஒவ்வொரு கட்சியிலும் உருவாகக் கூடும். 

இது பூத்துக் குலுங்கும் ஜனநாயக  பூச்செடியின் மீது ஆசிட் ஊத்துகிற அபாயமாகும் என்பதை கருத்தில் கொண்டு பா.ஜ.க.  உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் தொண்டர்களுக்கு எதிரான  எடப்பாடியின் அபகரிப்பை ஆதரிக்கக்கூடாது என்பதை சிவகங்கை மாவட்டக் கழகம் வேண்டுகோளாக முன்வைக்கிறது.

இன்னும் நீதிமன்றம், தேர்தல் ஆணையம், மக்கள் மன்றம் என எஞ்சியிருக்கும் படி நிலைகளில் எடப்பாடியின் அபகரிப்பு முறியடிக்கப்படும் என்பது சத்தியம். எனவே, எடப்பாடி கும்பலின் எதாச்சதிகார சர்வாதிகரப் போக்கை ஜனநாயகத்தை நேசிக்கும் அனைத்து கட்சிகளும் கண்டிக்க முன் வர வேண்டும் எனவும் இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

மேற்கண்ட ஏழு தீர்மானங்களும் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டன..

இவன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் . சிவகங்கை மாவட்டக் கழகம்..

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story