மாணவர்களுக்கு ரூ.3,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Rs 3,000 scholarship scheme for students Launched by Chief Minister MK Stalin

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது :

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் அர்ச்சகர், ஓதுவார், பிரபந்த விண்ணப்பர், வேதபாராயணர் 

மற்றும் இசை கற்போர் (தவில், நாதஸ்வரம்) ஆகிய பயிற்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையை ரூ.3 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கும் திட்டத்தை, 18 மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கி, தொடங்கி வைத்தார்.

இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறையின் 20210-22-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், அர்ச்சகர், ஓதுவார், பிரபந்த விண்ணப்பர், வேதபாராயணர் மற்றும் இசை கற்போர் (தவில், நாதஸ்வரம்) ஆகியோருக்கு பயிற்சிக் காலத்தில் ஏற்கனவே ரூ. 1,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 

தற்போது, அந்த ஊக்கத்தொகை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மற்றும் மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் வேதபாராயணர் பள்ளிகளில் பயின்று வரும் 18 மாணவர்கள், மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மற்றும் திருவண்ணாமலை, 

அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் பயின்று வரும் 24 மாணவர்கள் மற்றும் பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தவில், நாதஸ்வர பயிற்சி பள்ளிகளில் பயின்று வரும் 25 மாணவர்கள், 

என மொத்தம் 67 மாணவர்கள் பயன்பெறும் வகையில், உயர்த்தப்பட்ட உதவித்தொகையான 3 ஆயிரம் ரூபாயினை 18 மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் வழங்கி, தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*

Share this story