தலா ரூ.5,000 தர வேண்டும் : தமிழக அரசுக்கு, ராமதாஸ் கோரிக்கை
 

Rs 5,000 per person Ramadas request to the Tamil Nadu government

காவிரி பாசன மாவட்டங்களில், கடந்த ஆண்டும் சம்பா பருவத்தில் காலம் தவறி பெய்த மழையால் நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்து உழவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது என ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

சென்னை மாநகரின் பல பகுதிகள் 2015-ம் ஆண்டில் சந்தித்ததை விட மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றன. 

வட சென்னை, தென்சென்னை என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்துப் பகுதிகளிலும் மழை வெள்ள நீர் தேங்கிக் கிடக்கிறது. 

வசிப்பதற்கு மிகவும் பாதுகாப்பான இடங்கள் என்று கூறப்பட்ட பகுதிகளில் கூட மக்களால் வீடுகளை விட்டு வெளியில் வர முடியவில்லை.

குடிநீர், பால், காய்கறிகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கூட அவர்களுக்கு கிடைக்கவில்லை. தொடர்ந்து ஆறு நாட்கள் நீர்ச்சிறையில் அடைபட்டு கிடப்பது உளவியல் ரீதியாகவும் கொடுமையானது. 

சென்னையின் பல பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் மழை நீரை போர்க்கால அடிப்படையில் வெளியேற்றுவதன் மூலம் சென்னை மாநகர மக்களுக்கு மாநகராட்சியும், தமிழக அரசும் நீர்ச்சிறையிலிருந்து விடுதலை தர வேண்டும்.

காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த ஆண்டும் சம்பா பருவத்தில் காலம் தவறி பெய்த மழையால் நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்து உழவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. 

நடப்பு சம்பா பருவம் வெற்றிகரமாக அமைந்தால் தான் அவர்களால் இழப்பை ஈடு செய்ய முடியும். ஆனால், நடப்பு சம்பா பருவத்திலும் கனமழையால் அவர்களுக்கு இழப்பு தான் ஏற்பட்டிருக்கிறது. அதை தமிழக அரசும் உணர்ந்து பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக அமைச்சர்கள் குழுவை காவிரி டெல்டாவுக்கு அரசு அனுப்பி வைத்திருக்கிறது. 

அமைச்சர்கள் குழுவினர் ஆய்வை விரைவாக முடித்து பாதிக்கப்பட்ட உழவர்கள் அனைவருக்கும் போதிய இழப்பீடு வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

சென்னையிலும், பிற பகுதிகளிலும் தொடர்ந்து பெய்த மழை பெரும்பான்மையான குடும்பங்களுக்கு வாழ்வாதார இழப்புகளையும், உடமை இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குறைந்தது ரூ.5,000 நிதியுதவி வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
*

Share this story