தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி கேட்டு போலீசாரிடம் உரிய முறையில் மனு அளித்தும் அவர்கள் அனுமதிக்க மறுக்கிறார்கள் என்று கூறி அந்த அமைப்பினர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை ஐகோர்ட்டை நாடினர்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்குமாறு கடந்த செப்டம்பர் 22-ந்தேதி உத்தரவிட்டது. இதன் பிறகும் ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி அளிக்காததால் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மீண்டும் ஐகோர்ட்டை நாடி கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தொடர்ந்தனர்.
இதனை விசாரித்த தனி நீதிபதி சுற்றுச்சுவருடன் கூடிய விளையாட்டு மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணியை நடத்த உத்தரவிட்டார். இதனை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மீண்டும் ஐகோர்ட்டை நாடினர். அப்போது தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை திறந்தவெளியில் நடத்த போலீசார் அனுமதிக்க வேண்டும் என்றும், தமிழக அரசு தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தமிழக அரசு, ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டது.
இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. கடந்த மே மாதம் 27-ந்தேதி இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று அனுமதி வழங்கியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதன் மூலம் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியுள்ளது. இதனால் விரைவில் தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.