கரடு முரடான மலைப்பாதை; வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணி தீவிரம்..

By 
karadu

மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், அதற்காக மலை கிராமப் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு முன்னதாகவே  வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிழக்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியான போதமலை  கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. 

போதமலை மலைப்பகுதியில் கீழூர், மேலூர், கெடமலை என 3 சிறுகிராமங்களில் 1142 வாக்காளர்கள் உள்ளனர். மலைப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் வாக்களிப்பதற்காக ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில்  பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ராசிபுரம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கம் முன்னிலையில்  பாதுகாப்பு அறையானது திறக்கப்பட்டு மின்னணு இயந்திரங்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போதமலை மலைப்பகுதிக்கு அனுப்பப்பட்டது

மலை பகுதியில்  உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு  மின்னணு  வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்ல சாலை வசதி இல்லாததால் போதமலை அடிவாரத்தில் இருந்து  சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு  கரடு முரடானா பாதையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை அரசு அதிகாரிகள் தலை சுமையாக  எடுத்துச் சென்றனர்.

மேலும் அரசு அதிகாரிகளுக்கு தேவையான இதரப் பொருட்களை மலைவாழ் மக்கள் தலை சுமையாக கொண்டு சென்றனர். மலைப்பகுதியில் உள்ள  கீழூர் ஊராட்சியில் மண்டல அலுவலர் விஜயகுமார் தலைமையில் பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலை பள்ளியில், கெடமலை பகுதியில் மண்டல அலுவலர் பழனிச்சாமி தலைமையில்   பழங்குடியினர் உண்டு உறைவிட துவக்க பள்ளியிலும், என 2 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு அதற்கான வாக்குப்பதிவானது தேர்தல் நடைமுறை விதிகளின்படி நாளை நடைபெற உள்ளது. 

தற்போது 140 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 31 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலை அமைக்கும் பணியானது தொடங்கப்பட்டு இன்னும் 2 வருட காலத்திற்குள் பணியானது முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அடுத்த  சட்டமன்ற தேர்தலில் போதமலைக்கு வாக்குச்சாவடி மையங்களுக்கு  தேவையான  பொருட்களை இருசக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 50 வருடத்திற்கு மேலாக அரசு அதிகாரிகள், காவல் துறையினர் மற்றும் மலைவாழ் மக்கள்  என  வாக்குப்பதிவு இயந்திரங்களை தலை சுமையாக எடுத்துச் சென்று வருவது குறிப்பிடத்தக்கது.

Share this story