அதிமுக தொண்டர்களுக்கு, சசிகலா வேண்டுகோள்..

By 
vks2

சசிகலா விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க.வின் கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்று விட்டதாக மார்தட்டி கொள்கிறார்கள். இது ஜனநாயக முறையில் நேர்மையாக கிடைத்த வெற்றியாக கருத முடியாது.

இது மக்களை ஏமாற்றி, எதிர்க்கட்சிகளை முடக்கி, விலைக்கு வாங்கப்பட்ட வெற்றியாகத்தான் பார்க்க முடிகிறது. அ.தி.மு.க. இன்றைக்கு இருக்கும் நிலைமையை பயன்படுத்தி கொண்டு தி.மு.க. அதில் குளிர் காய்வதால் பெற்ற வெற்றியாகத் தான் பார்க்க முடிகிறது.

தி.மு.க.வினர் எதிர்க்கட்சியினரை வலுவிழக்க செய்து அதன் மூலம் வெற்றி பெறலாம் என்று திட்டமிட்டு நம் இயக்கத்தின் பிளவை பயன்படுத்தி கொண்டு ஒன்றிணையாமல் பார்த்து கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். நம் இயக்கத்தில் இருக்கும் ஒரு சில நிர்வாகிகள் இதை எல்லாம் கொஞ்சமும் சிந்தித்து பார்க்காமல் தனது சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காக, கோடான கோடி தொண்டர்களின் எதிர் காலத்தை கேள்விக்குறியாக்குவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அனைவரும் ஒன்றிணைந்து ஒரு வலிமையான இயக்கமாக இந்த இடைத்தேர்தலை சந்தித்து இருந்தால் அ.தி.மு.க. இன்றைக்கு வெற்றி பெற்று இருக்கும். தி.மு.க. கூட்டணி படுமோசமாக தோல்வியை தழுவி இருக்கும். எனவே தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்திற்கு இணங்க, ஒட்டுமொத்த அ.தி.மு.க. தொண்டர்கள் எதிர்பார்க்கின்ற ஒரு வலிமையான, ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வை அமைத்து, வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியை தோற்கடித்து மாபெரும் வெற்றியை நமது இருபெரும் தலைவர்களுக்கும் சமர்பிப்போம்.

எனவே அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் இந்த தோல்வியை கண்டு துவண்டு விடாமல், நம்பிக்கையோடு இருங்கள். விரைவில் அனைத்திற்கும் ஒரு நல்ல தீர்வு ஏற்படும். நான் அதை கண்டிப்பாக செய்து முடிப்பேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
 

Share this story