ஓபிஎஸ் - சசிகலா திடீர் சந்திப்பு.. காரில் இருந்து இறங்கி உரையாடல்..

By 
kiki

சசிகலாவும், முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இன்று நேருக்கு நேர் சந்தித்து உரையாடினர். பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வந்தபோது இருவரும் சந்தித்துப் பேசிக்கொண்டனர்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுக நிறுவனத் தலைவருமான பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, மெரினா கடற்கரை அருகே உள்ள அண்ணா நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக அமைச்சர்கள், சசிகலா, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் ஆயிரக்கணக்கான திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் இன்று மலர்தூவி மரியாதை செய்தனர்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வந்து சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். ஓ.பன்னீர்செல்வம், அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு வெளியே வந்து காரில் கிளம்பியபோது, ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும் அப்பகுதிக்கு காரில் வந்தார்.

சசிகலா வருவதை கவனித்த ஓ.பன்னீர்செல்வம், காரில் இருந்து இறங்கிச் சென்று, சசிகலாவை பார்த்தார். காரில் இருந்தபடி, கண்ணாடியை இறக்கிவிட்டு பேசிய சசிகலா, பின்னர் காரில் இருந்து இறங்கி ஓபிஎஸ்ஸிடம் நலம் விசாரித்து, சில நிமிடங்கள் பேசினார். இருவரும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். ஓபிஎஸ் அருகே நின்ற வைத்திலிங்கத்திடமும் நலம் விசாரித்தார் சசிகலா.

எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலால் கட்சியை விட்டு ஓ.பன்னீர்செல்வம் வெளியேற்றப்பட்ட பிறகு, போட்டியாக கட்சியை நடத்தி, நிர்வாகிகளை நியமித்து வந்தார் ஓபிஎஸ். தொடர்ந்து, டிடிவி தினகரனையும் சந்தித்தார். சசிகலாவையும் வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன் எனக் கூறியிருந்தார் ஓபிஎஸ். ஆனால், ஒன்றரை ஆண்டு காலமாக இருவரும் சந்திக்காமலேயே இருந்து வந்தனர்.

இந்நிலையில், இன்று ஓ.பன்னீர்செல்வம் - சசிகலா இடையேயான சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இந்தச் சந்திப்பு யதேச்சையானதல்ல என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். கடந்த முறை எம்.ஜி.ஆர் நினைவு நாளன்று இதேபோல, ஒரே நேரத்தில் ஓபிஎஸ்ஸும் சசிகலாவும் எம்ஜிஆர் நினைவிடத்தில் இருந்தனர். ஆனால், ஓபிஎஸ் இருந்ததையடுத்து, ஓபிஎஸ் அங்கிருந்து கிளம்பும் வரை காரில் இருந்து இறங்காமலேயே காத்திருந்தார் சசிகலா.

ஓபிஎஸ் தனது காரில் கிளம்பிய பிறகு தான், சசிகலா காரில் இருந்து இறங்கி, எம்ஜிஆர் நினைவிடத்திற்குச் சென்றார். ஆனால், லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இன்று இருவரும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசியுள்ளனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஓபிஎஸ், சசிகலா இருவரும் சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதங்களைக் கிளப்பி விட்டுள்ளது.

Share this story