சவுக்கு சங்கர், மேலும் 2 வழக்குகளில் கைது: அடுத்தடுத்தடுத்து பாயும் வழக்குகள்..

By 
savukku5

சென்னையைச் சேர்ந்த சவுக்கு என்ற யுடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி (சிஇஓ) சங்கர். இவர் தனது நேர்காணல் ஒன்றில், காவல் துறை உயர்அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகப் புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, கோவை மாநகர சைபர் க்ரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா அளித்த புகாரின் அடிப்படையில், தேனி மாவட்டம் பூதிப்புரத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் அவர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் கோவை மத்திய  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, கைது நடவடிக்கையின் போது சவுக்கு சங்கரின் காரில் இருந்த அரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன்பேரில், சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாக தேனி பழனிசெட்டிபட்டி தனியாக ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளனர். கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் சவுக்கு சங்கரை வருகிர 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

இதனிடையே, பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வழக்குக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சேலம், திருச்சியில் பெண் போலீசார் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 3ஆவது வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், யூடியூபர் சவுக்கு சங்கர் மேலும் இரண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். மூத்த பெண் பத்திரிக்கையாளர் சந்தியா ரவிசங்கர் மற்றும் தமிழர் முன்னேற்றப் படை நிறுவனர் வீரலட்சுமி ஆகியோர் கொடுத்த 2 வழக்குகளில் யூடியூபர் சவுக்கு சங்கரை சென்னை நகர காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கான உத்தரவு நகலை கோவை சிறையில் உள்ள சவுக்கு சங்கரிடம் சென்னை போலீசார் இன்று ஒப்படைத்தனர்.

முன்னதாக, திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த டி.எஸ்.பி யாஸ்மின் என்பவர் திருச்சி சைபர் கிரைம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், நாகையிலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம், சவுக்கு சங்கர் தனக்கு ஜாமீன் கோரி தொடர்ந்த வழக்கானது மே 10ஆம் தேதி (நாளை) கோவை 4ஆவது ஜூடிசியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்காது என்கிறார்கள். ஒருவேளை ஜாமீன் கிடைத்தாலும் அடுத்தடுத்து அவர் மீது பாயும் வழக்குகளில் அவர் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கூறுகிறார்கள்.

இதனிடையே, சவுக்கு சங்கரை  குண்டாஸ் வழக்கில் கைது செய்ய வாய்ப்பிருப்பதாக சவுக்கு மீடியா நிறுவனத்தில் பணியாற்றும் விக்னேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story