தி.மு.க. சார்பிலேயே சீமான் வேட்பாளராக நிற்கலாம் : அண்ணாமலை பேச்சு

பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை இன்று தூத்துக்குடி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
என் மண் என் மக்கள் முதற்கட்ட நடைபயணத்தை 41 தொகுதிகளில் முடித்துவிட்டேன். 2-வது கட்ட நடைபயணத்தை தென்காசி மாவட்டத்தில் தொடங்க உள்ளேன். நெல்லை மாவட்டத்தில் எனது நடைபயணத்தை சிறப்பான முறையில் ஒருங்கிணைத்த பா.ஜ.க. நிர்வாகியை தி.மு.க. நிர்வாகி உள்ளிட்டவர்கள் வெட்டி கொலை செய்துள்ளனர்.
நேற்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பா.ஜ.க. நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது தமிழகத்தில் வன்முறை கலாசாரம் பரவி உள்ளதை காட்டுகிறது. கொங்கு பகுதியில் முதல் முறையாக அரிவாள் கலாசாரம் உருவெடுத்துள்ளது. ஒருபுறம் மதுவாலும், மறுபுறம் கூலிப்படையாலும் தமிழகம் சீரழிந்து வருகிறது.
தென் மாவட்டத்தில் இந்த சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் இங்கு வளர்ச்சியின்றி போதிய வேலை வாய்ப்புகள் இல்லாததாகும். தமிழகத்தில் இத்தனை பிரச்சினை நடைபெற்று வரும்போது, அதனை பற்றி பேசாமல் முதலமைச்சர் இந்தியா வளர்ச்சி பற்றி பேசுகிறார். 30 மாத தி.மு.க. ஆட்சி சாதனை பற்றி பேசாமல் வளர்ச்சி பற்றி பேசி வருகிறார். கடந்த முறை பாராளுமன்ற தேர்தலின்போது ரபேல் பற்றி இல்லாததை ராகுல் காந்தி பேசியது போல், தற்போது மோடி ஆட்சியில் பா.ஜ.க. ஒன்றுமே செய்யவில்லை என்று முதலமைச்சர் பொய் பேசி வருகிறார்.
மோடி ஆட்சியின்போது தான் நாடு முழுவதும் பள்ளிகளில் 100 சதவீத கழிப்பறைகள் கட்டாயம் என ஆக்கப்பட்டது. தமிழகத்தில் தற்போதும் பள்ளிகளில் மாணவர்கள் சாதி குறித்த கயிறுகளை கட்டி வருகிறார்கள். இதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. இதனால் அவர்களிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. பிரதமர் மோடி ஆட்சியில் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்திலும் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது. இதனை உலகம் பார்த்து வியந்து வருகிறது. சனாதனம் பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் தொடர்ந்து அவர் அது குறித்து பேசி வருகிறார். இதனால் தேர்தலில் அவர்களுக்கு பின்னடைவு ஏற்படும்.
ஒரு பெண் புகார் அளித்ததும் சீமான் பதறி போய் உள்ளார். அதற்கு முன்னால் வரை தி.மு.க. பற்றி அவர் பேசிய பேச்சுக்களால் அவர் மீது எனக்கு மரியாதை இருந்தது. ஆனால் வழக்குக்கு பயந்து தற்போது நாங்களும் தி.மு.க.வும் பங்காளிகள் என கூறி உள்ளார். இதனால் அவரை பார்த்து வெட்கப்படுகிறேன். அவர் மீது உள்ள மரியாதை சிதைந்துள்ளது.
பிரதமர் மோடி ராமநாதபுரம் தொகுதியில் நின்றால் அங்கு போட்டியிடாமல் தி.மு.க.வுக்கு ஆதரவளிப்பேன் என்று கூறி உள்ளார். இதற்கு அவர் தி.மு.க. சார்பிலேயே வேட்பாளராக நிற்கலாம். தனிக்கட்சி தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.