சென்னையில் பரபரப்பு : திமுக ஆட்சிக்கு எதிராக, ஈபிஎஸ் தலைமையில் பேரணி..

edappadi4

தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் விஷச் சாராயம் குடித்த 22 பேர் உயிரிழந்த நிலையில் இன்னும் பலா் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி வரும் நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதால் கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருந்தார்.

இந்த நிலையில் மேலும் ஒரு சம்பவமாக தஞ்சாவூர் டாஸ்மாக் பாரில் மது குடித்த குப்புசாமி, குட்டி விவேக் ஆகிய 2 பேர் நேற்று பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க. ஆட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கள்ளச்சாராயத்தால் பலர் பலியாகி வருவதை கண்டதும் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக கவர்னரிடம் மனு கொடுக்க போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, தொடர் மின்வெட்டு, விஷச்சாராய மரணங்கள், அதிகரித்து வரும் போதைப் பொருட்களின் புழக்கம், ரூ.30 ஆயிரம் கோடிக்கு விசாரணை, பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ விவகாரம் உள்ளிட்ட ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு கொடுக்கப் போவதாக அறிவித்து இருந்தார். இதற்காக அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுத்து இருந்தார்.

அதன்படி இன்று காலையில் சைதாப்பேட்டை சின்னமலை அருகே பல்லாயிரக்கணக்கில் அ.தி.மு.க.வினர் திரண்டனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான தொண்டர்கள் தி.மு.க. ஆட்சிக்கு எதிரான பதாகைகளுடன் கலந்து கொண்டனர். எடப்பாடி பழனிசாமி வந்ததும் கவர்னர் மாளிகை நோக்கி கண்டன பேரணி புறப்பட்டது.
 

Share this story