பாலியல் குற்றச்சாட்டு வீடியோ பரபரப்பு : கே.டி.ராகவனிடம் அதிரடி விசாரணை

By 
Sexual assault video sensationalism Action investigation against KD Raghavan

தமிழக பா.ஜனதாவின் மாநில பொதுச் செயலாளராக இருந்தவர் கே.டி. ராகவன். இவர் ஊடகத்தில் நடைபெறும் விவாதத்தில் பா.ஜனதா சார்பில் பங்கேற்று வந்தார். 

இதன் காரணமாக, அவர் கட்சியில் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் பிரபலமாக இருந்தார்.

வைரலான வீடியோ :

கே.டி.ராகவன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, வீடியோ காட்சி ஒன்று நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாய் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அந்த வாட்ஸ் அப் வீடியோ அழைப்பில், பெண் ஒருவருடன் கே.டி.ராகவன் அரைநிர்வாண நிலையில், ஆபாசமாக பேசுவது போன்றும், அந்த பெண்ணுடன் பேசிக்கொண்டு இருக்கும்போதே அருவருக்கத்தக்க செயலில் ஈடுபடுவது போன்றும் காட்சிகள் உள்ளன.

பா.ஜனதாவை சேர்ந்த மதன் ரவிச்சந்திரன் இந்த வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோ பா.ஜனதா வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையை கே.டி.ராகவன் சந்தித்து பேசினார்.

சட்டப்படி சந்திப்பேன் :

பின்னர், கே.டி.ராகவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த விவகாரம் தொடர்பாக நான் மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து விவாதித்தேன். நான் தற்போது வகித்து வரும் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன். 

இந்த வழக்கை சட்டப்படி சந்திப்பேன். எனக்கும் கட்சிக்கும் களங்கம் ஏற்படுத்த சதி நடக்கிறது. தர்மம் வெல்லும்’ என்று கூறியிருந்தார்.

இந்த பாலியல் விவகாரம் பா.ஜனதா கட்சிக்குள், பூதாகரமாக பேசப்படுகிறது. 

இந்த வீடியோவை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன், ‘இன்னும் 14 பேரின் வீடியோ தன்னிடம் இருப்பதாகவும், நேரம் வரும்போது அதை வெளியிடுவேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.

பா.ஜனதா கட்சியில் உள்ள பலர் சிக்கலான இந்த வீடியோ விவகாரத்தில் சிக்கி இருக்கலாம் என்பதால், கட்சி வட்டாரத்தில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

விரைவில் தீர்வு :

இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க, பா.ஜனதா மாநில செயலாளர் மலர்கொடி தலைமையில், ஒரு சிறப்பு விசாரணை குழுவை மாநில தலைவர் அண்ணாமலை நியமித்துள்ளார். 

இந்த விவகாரம் தொடர்பாக, மலர்கொடி கூறியதாவது :

கே.டி.ராகவன் மீதான பாலியல் விவகாரத்தில் நாங்கள் உடனடியாக விசாரணையை தொடங்குகிறோம். இந்த விசாரணைக்காக மேலும் சில உறுப்பினர்கள் என்னோடு இடம்பெற உள்ளனர். அவர்களை மாநில தலைவர் அண்ணாமலை நியமிப்பார்.

புகார் கூறப்பட்டுள்ள கே.டி.ராகவனிடமும் விசாரிப்போம். சம்பந்தப்பட்ட பெண் யார் என்பதும் அடையாளம் தெரிந்துள்ளது. 

அவர் கட்சியில் இருக்கிறாரா? ராகவனுடன் எப்படி தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார் என்று விசாரிக்க உள்ளோம்.

ராகவனை சிக்க வைக்க திட்டமிட்டு, அந்த பெண்ணை பயன்படுத்தினார்களா என்பது எல்லாமே விசாரணையில் தான் தெரியவரும். 

எங்கள் விசாரணை, அனைத்து கோணங்களிலும் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் நடைபெறும்.

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்தவர். அவருக்கும் இதுபோன்ற குற்றங்கள் எந்த மாதிரியெல்லாம் நிகழும் என்பது நன்றாகவே தெரியும். எனவே, அவரும் எங்களுக்கு ஆலோசனைகள் வழங்குவார். 

அதன்படி, எங்களது விசாரணை தொடரும். இதை நீண்ட நாட்கள் விசாரிக்க முடியாது. விரைவிலேயே தீர்வுகாண வேண்டும் என்பதால், உடனே விசாரித்து அறிக்கையை மாநில தலைவரிடம் வழங்குவோம்' என்றார்.

Share this story