சவால் விடுத்த ஸ்டாலின்; பதிலடி கொடுக்க கன்னியாகுமரியில் களத்தில் இறங்குகிறார் மோடி..

By 
modimks

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் பாஜகவின் வாக்குகளை அதிகரித்த 3 மாவட்டங்கள் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். அந்த வகையில் நாளை கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருவதையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படவுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் பாஜகவை பொறுத்துவரை ஹாட்ரிக் வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் வெற்றி பெற வேண்டிய தொகுதிகளை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.

அந்த வகையில் தமிழகத்தில் 25 தொகுதிகளை குறிவைத்துள்ளது. ஆனால் தமிழகத்தில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு குறைவாக இருப்பதாக கருத்து கணிப்பு தெரிவித்து வருகிறது. எனவே பாஜகவின் வெற்றியை அதிகரிக்கும் வகையில் பிரதமர் மோடி தமிழகத்தில் அடிக்கடி பயணம் மேற்கொண்டு மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். 

மேலும், பாஜக சார்பாக நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு திமுக அரசு மற்றும் இந்தியா கூட்டணிக்கு எதிரான கருத்துகளை கூறி வருகிறார். கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் பிரதமர் மோடி 5 முறை தமிழகத்திற்கு வந்துள்ளார். இந்தநிலையில் மீண்டும் நாளை தமிழகத்திற்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பாக நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார்.

பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரியில் நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.  கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்.

இதனிடையே பொள்ளாச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருவதாக செய்தி வந்திருக்கிறது. வரப்போகிறார். தமிழ்நாட்டுக்குச் செய்து தந்திருக்கின்ற சிறப்புத் திட்டங்களை பட்டியலிடுங்கள்!  என்ன சிறப்பு திட்டங்கள் கொண்டு வந்தீர்கள் என்று தமிழ்நாட்டு மக்கள் எல்லாரும் கேட்கவேண்டும்! ”பதில் சொல்லுங்க பிரதமரே..” என்று எல்லோரும் கேட்க வேண்டும். கேட்பீர்களா! என ஸ்டாலின் கூறியிருந்தார். எனவே ஸ்டாலினின் கேள்விக்கு மோடி பதில் அளிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

பிரதமர் மோடியின் கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தை தொடர்ந்து 18 ஆம் தேதி கோவை ஆர்.எஸ் புரத்தில் நடைபெறும் மதியம்  12.00 மணிக்கு நடைபெறும் பாஜக பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். அடுத்தாக 19 ஆம் தேதி சேலம் மாவட்டம் கெஜநாயக்கன்பட்டி மைதானத்தில் காலை 11.00 மணிக்கு  நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் தமிழக பயணத்தையொட்டி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

Share this story