தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என்று சொல்ல முதல்வர் ஸ்டாலினுக்கு அதிகாரம் கிடையாது: அண்ணாமலை..

By 
dmkbjp13

குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அதனை ஆளும் பாஜக அரசு சட்டமாக்கியுள்ளது.

எனினும், இஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இருப்பது, பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து வந்துவிடும் என அஞ்சுவது, இலங்கையில் இருந்து தமிழகத்தில் குடியேறிய அகதிகள் இடம்பெறாதது என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் நிலவி வருகிறது.

இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு நேற்று மாலை அறிவிப்பானை வெளியிட்டது. கடந்த 2019ஆம் ஆண்டில் சட்டம் இயற்றப்பட்ட நிலையில், 4 ஆண்டுகள் கடந்து நேற்று திடீரென சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்த சட்டத்தை தங்களது மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

சிறுபான்மை சமூகத்தினர் மற்றும் முகாம்வாழ் தமிழர்களின் நலனுக்கும் சிஏஏ சட்டம் எதிரானது என தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், இந்திய மக்களிடையே பேதங்களைத் தோற்றுவிக்க வழிவகை செய்யும் இந்தச் சட்டத்தால் எந்தவிதமான நன்மையோ, பயனோ இருக்கப் போவதில்லை. இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு சட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு இடம் கொடுக்காது என உறுதிபட தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என்று சொல்ல முதல்வர் ஸ்டாலினுக்கு அதிகாரம் கிடையாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை பாஜக தலைமையகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “சிஏஏ யாருக்கும் எதிரானது கிடையாது. அது, மத்திய அரசின் முழு அதிகாரத்தில் இருக்கக் கூடிய சட்டம். சிஏஏவை நிறுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? என கேள்வி எழுப்பினார்.

முதல்வர் வரலாற்று புத்தகத்தை படிக்க வேண்டும் என சாடிய அண்ணாமலை, “மாநில அரசுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? மத்திய அரசுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? மத்திய, மாநில அரசுகளுக்கு சேர்ந்து என்ன அதிகாரம் இருக்கிறது? என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். முதல்வராக எதிர்க்க்கிறேன் என்றால் சரி. தமிழ்நாட்டுக்குள் விட மாட்டேன் என்று சொல்ல அவருக்கு அதிகாரம் கிடையாது” என்றார்.

Share this story