இந்தியா கூட்டணி ஆட்சியமைந்தால் ஸ்டாலின் பிரதமர் - அமித்ஷா கருத்து..

By 
shah1

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற்று 3ஆவது முறையாக ஆட்சியமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. 370 இடங்களில் தனித்தும், 400 இடங்களுக்கு மேல் கூட்டணியுடன் வெற்றி பெறவும் பாஜக இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த இரண்டு முறை போலவே இந்த முறையும் பிரதமர் மோடியையே பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி, தேசிய ஜனநாயகக் கூட்டணி களமிறங்கியுள்ளது. நாடு முழுவதும் மோடி அலை வீசுவதாகவும் பாஜகவினர் கூறி வருகின்றனர். மக்களும் மீண்டும் மோடி வர வேண்டும் என விரும்புவதாக பிரசாரக் கூட்டங்களில் மோடியே கூறி வருகிறார்.

அதேசமயம், பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. ஆனால், எதிர்க்கட்சிகள் சார்பாக பிரதமர் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அந்த வகையில், பிரதமர் மோடியும் இதுகுறித்து தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார். “இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஓராண்டுக்கு ஒரு பிரதமர் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒருவர் பிரதமராக இருப்பார்கள். ஓராண்டுக்கு ஒரு பிரதமர் இருந்தால் உலகம் நம்மை பார்த்து ஏளனம் செய்யும். உங்களுக்கு ஓராண்டுக்கு ஒரு பிரதமர் தேவைதானா?” என பிரதமர் மோடி விமர்சித்து வருகிறார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நாங்கள் ஓராண்டுக்கு ஒரு பிரதமரை கூட ஏற்றுக் கொள்வோம், ஆனால் நிச்சயமாக மோடியை பிரதமராக வர விடமாட்டோம் என்று எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு பதிலளித்த சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) எம்.பி., சஞ்சய் ராவத், “ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரியை விட கூட்டணி ஆட்சியே சிறந்தது. யாரை பிரதமராக தேர்வு செய்கிறோம் என்பது நமது விருப்பம். ஒரு வருடத்தில் இரண்டு அல்லது நான்கு பிரதமர்களை கூட உருவாக்குவோம், ஆனால் நம் நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி செல்ல விடமாட்டோம்.” என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்தியா கூட்டணி ஆட்சியமைந்தால் மு.க.ஸ்டாலின் பிரதமர் இருப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

“இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஓராண்டுக்கு மு.க.ஸ்டாலின் பிரதமராக இருப்பார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஓராண்டுக்கு பிரதமராக இருப்பார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஓராண்டு பிரதமராக இருப்பார். ஏதேனும் ஒரு ஆண்டு மிச்சம் இருந்தால் ராகுல் காந்தி பிரதமராக இருப்பார்.” என்றார்.

இந்தியா கூட்டணி கூறுவதுபோல் ஒரு நாட்டை இவ்வாறெல்லாம் நடத்த முடியாது என்ற அமித் ஷா, “30 ஆண்டுகளாக ஸ்திரத்தன்மையற்ற ஆட்சி நடைபெற்றதால் நாடு அதற்கான விலையை கொடுத்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக வலிமையான தலைவர் கிடைத்ததன் மூலம் அரசியல் நிலைத்தன்மை ஏற்பட்டுள்ளது.” என்றார்.

Share this story