தமிழ்மொழி அழிந்து வருகிறது : ராமதாஸ் பேச்சு

tamil1

தமிழகம் முழுவதும் தமிழைத்தேடி விழிப்புணர்வு பரப்புரை பயணம் பா.ம.க.வின் பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பா.ம.க.நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேசியதாவது:-

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தமிைழத்தேடி பரப்புரை பயணத்தை மேற்கொண்டு வருகிறேன். எந்த இடத்திலும் தமிழை காணவில்லை. திண்டுக்கல்லில் வந்து பார்த்தபோதும் இங்கும் இல்லை.

இதனைதொடர்ந்து சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையை தேடிச்செல்கிறேன். அங்காவது தமிழ் இருக்கிறதா என்று பார்க்க விரும்புகிறேன். தமிழ்மொழியை குழந்தைகள் இடத்தில் இருந்து நாம் கற்றுக்கொடுக்க வேண்டும். அதன்பிறகு பள்ளியில் கற்றுக்கொடுக்க வேண்டும். ஆனால் இன்றைய குழந்தைகள் டாடி, மம்மி என்று அழைப்பதை பெற்றோர்கள் பெருமையாக கருதுகின்றனர்.

மகாகவி பாரதியாரின் ஆருயிர் நண்பரான நீலகண்ட சாஸ்திரிகள் ஒருமுறை மெல்ல தமிழ் இனி சாகும் என்று கூறினார். இதற்கு ஆவேசமாக பதில் அளித்த பாரதியார் மெல்ல தமிழ் இனி சாகும் என்று ஒரு பேதை உரைத்தான் என்றார். அப்போது தனது நண்பர் என்ற போதிலும் தமிழ்மொழி மீது பாரதியார் கொண்ட பற்று வெளிப்படுகிறது.

கிராமப்புற பெண்கள் கூட தன் மகள் கருவுற்றால் கன்சிவ் அடைந்துவிட்டதாக கூறுகின்றனர். ஒரு வார்த்தையில் பாதிக்குமேல் ஆங்கில கலப்பு வந்துவிட்டது. சாதம் என்ற சொல்லைக்கூட மறந்து வொயிட்ரைஸ் என்று அழைக்கும் நிலை வந்துவிட்டது. நம்நாட்டில் மிகப்பெரிய தலைவர்களாகிய அப்துல்கலாம், வெங்கட்ராமன், நிதியமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர் தமிழில்தான் படித்தார்கள், தமிழை வளர்த்தார்கள்.

தற்போது தமிழ் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் வந்துவிட்டது. மருத்துவம், பொறியியல், அறிவியல், தொழில்நுட்பம் என எந்த படிப்பையும் தமிழில் படிக்க முடியும். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 102 தமிழ் அறிஞர்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். நாங்கள் உயிரைத்தருகிறோம். தயவுசெய்து தமிழை தாருங்கள் என்று போராடினர்.

கல்வி வணிகமயமானதால் பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுவதில்லை. சட்டங்கள் போட்டாலும் இதனை பள்ளிகள் மதிப்பது இல்லை. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் போன்ற நீதிமன்றங்களுக்கு சென்று வழக்கு போடுகின்றனர். இவர்கள் தமிழை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டணி வைத்து செயல்படுகின்றனர். தமிழை அழிப்பதற்கு பதிலாக நீங்கள் பொரிகடலை வியாபாரம் செய்யலாம்.

தற்போது பிரி.கே.ஜிஎன்ற படிப்பிற்கு ரூ.2லட்சம் வசூல் செய்யப்படுகிறது. இதற்கே இவ்வளவு தொகை என்றால் மற்ற படிப்புகளுக்கு எவ்வளவு செலவாகும் என எண்ணிப்பார்க்க வேண்டும். தற்போது பிறமொழியில் பெயர்பலகை வைத்துள்ளவர்கள் உடனடியாக அதனை தமிழில் மாற்றவேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் ஒரு மாதத்திற்கு பிறகு எங்கள் இளைஞர்கள் அதனை தார் பூசி அழிப்பார்கள்.

நாங்கள் எந்தமொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. தமிழ்மொழியை காக்கவே விரும்புகிறோம். சட்டத்தை மீறி யார் செயல்பட்டாலும் நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம். இவ்வாறு பேசுவதால் நாங்கள் வன்முறையை தூண்டும் வகையில் பேசுவதாக நினைக்ககூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
 

Share this story