சிறுமி பாலியல் படுகொலை வழக்கில், புதுவை கவர்னர் தமிழிசையிடம், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்: அ.திருமலை வலியுறுத்தல்..

By 
srimathi

மாணவிகள் ஆர்த்தி, ஸ்ரீமதி ஆகிய இருவரது பாலியல் படுகொலை குறித்து, அரசியல் விமர்சகரும் எழுத்தாளருமான கவிஞர் அ.திருமலை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 

புதுவை மாநிலத்தில் 9 வயது மாணவி சிறுமி ஆர்த்தி , 2 கயவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடந்த வாரம் சனிக்கிழமை படுகொலை செய்யப்பட்டார். இந்த பயங்கர நிகழ்வு  இந்திய மண்ணையே உலுக்கி எடுத்தது.

இதைக் கண்டித்தும் ஆறுதல் கூறியும் புதுவை மாநிலக் கவர்னர் மேதகு. தமிழிசை அவர்கள் சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு பேட்டியும் அளித்தார்; அப்போது பேசிய அவர்,

'அவசரச் சட்டம் மூலமாகவோ, விரைவு நீதிமன்றம் மூலமாகவோ குற்றவாளிகலுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படும்' என்று தனக்குள்ள அதிகாரத்தை நம்பி அறைகூவல் விடுத்தார். இதற்கு உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் பாராட்டும் வரவேற்பும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி பள்ளிக்கூட மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு தமிழக கவர்னர் மேதகு. ஆர்.என்.ரவி அவர்கள் நேரில் சென்று ஏன் ஆறுதல் கூறவில்லை? குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்கப்படும் என்று ஏன் அறிவிக்கவில்லை?

தமிழிசைக்கு இருக்கும் அதிகாரம் ஆர்.என்.ரவிக்கு இருக்குமா? இருக்காதா? அதிகாரம் இருந்தும் அவர் ஏன் அதைப் பயன்படுத்தவில்லை?

தமிழக மக்கள் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் அப்படி என்ன அவருக்கு கோபம்? தமிழக மக்களுக்கு துரோகம் செய்வதால் தனது பதவி பறி போனாலும் பரவாயில்லை என்று நினைக்கிறாரா? அவர் அப்படி நினைக்கும் பட்சத்தில் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஏன் இன்னும் தாமதிக்க வேண்டும்? உடனே ஆர்.என்.ரவியை வாபஸ் பெறுங்கள். 

இது புதுவை மற்றும் தமிழக மக்கள் கோரிக்கை மட்டுமல்ல, உலகத் தமிழர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பும் ஆகும். 

மாணவிகள் ஆர்த்தி, ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கிடைத்துவிட்டால், 2024 தேர்தல் வெற்றி மூலம் இந்தியாவில் தாமரை மலர்வதையும், நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் மூன்றாவது முறையாக பாரதப் பிரதமர் ஆவதையும் யாராலும் தடுக்க முடியாது.
 
இவ்வாறு அரசியல் விமர்சகரும் எழுத்தாளருமான கவிஞர் அ.திருமலை தெரிவித்துள்ளார்.

Share this story