ஒரு நீண்டகாலத் திட்டத்தை, தமிழக அரசு வகுக்க வேண்டும் : மருது அழகுராஜ் கோரிக்கை

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்புகள் வருமாறு :
யோசிக்கலாமே :
திராவிட பூகோளத்தின் கலாச்சார மது.. 'கள்'தான். இதில், போதையும் குறைவு. அதனால் ஏற்படும் உபாதையும் குறைவு.
மேலும், சீமைச் சரக்குகளான பிராந்தி, விஸ்கி தயாரிப்பாளர்கள் நாட்டில் விரல் விட்டு எண்ணும் அளவிலான முதலாளிகள் என்றால்..
அதுவே, கள் எனும்போது அதனை உற்பத்தி செய்பவர்கள் பனை மற்றும் தென்னை விவசாயிகளாக இருப்பார்கள். இதனால் பயனடைவோர் எண்ணிக்கை பரந்து விரிந்ததாக இருக்கும்.
மரம் ஏறிப் பிழைப்போர், மண்பானை செய்வோர் என லட்சக்கணக்கானவர்கள் பயன் பெற 'கள்' ஏதுவாக அமையும்.
எனவே, டாஸ்மாக்குகளை கள்ளுக்கடைகளாக மாற்றி.. அதனையும் காலப்போக்கில் முழுவதுமாக மூடி.. பூரண மதுவிலக்கு பூமியாக புறநானூற்று தமிழ் மண்ணை உருவாக்கலாம்.
கள் இறக்கிவிட்டு, காய்ப்புக்கு விடப்படுகிற தென்னை மரங்கள் கூடுதல் மகசூல் தரும் என்கிறது அனுபவ விவசாயிகளின் கருத்து.
நாற்பத்தெட்டு நாட்கள், அதாவது ஒரு மண்டலத்துக்கு ஒரு மரத்து 'கள்' உண்டு வந்தால் தேகம் தேக்குப் போல் ஆகும் என்கிறது முன்னோர் நம்பிக்கை.
அதுபோல், சீமைச் சாராயத்தில் மூழ்கிக் கிடப்போரை 'கள்' கொண்டு மீட்டு, பிறகு மதுவை வெறுக்கும் மக்களாக அவர்களை மாற்றி ...பிறகு, வள்ளுவன் சொன்ன கள்ளுண்ணாமை காணலாமே.
இதற்கு ஒரு நீண்ட கால திட்டத்தை அரசு வகுக்க வேண்டும். இதற்கு அரசியல் நோக்கம் கடந்து மக்களும் துணை நிற்க வேண்டும்.
மதுவாழ்வும் பொதுவாழ்வும் :
மக்களின் நல்வாழ்வுக்காக, அரசியல் எனும் பொதுவாழ்வில் இருக்கிறோம் என நெஞ்சு நிமிர்த்தி சொல்ல.. மக்களை அழிக்கும் மதுபான உற்பத்தி ஆலைகளை நடத்துகிற டி.ஆர். பாலு, ஜெகத்ரட்சகன், திருமதி. சசிகலா உள்ளிட்டோர் முதலில் தாங்கள் நடத்துகிற மது உற்பத்தி ஆலைகளை மூடிவிட முன்வரலாமே.
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.