அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்: தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு..

By 
vijaytvk

உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும், ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றை உலக நாடுகள் சரிசெய்ய வலியுறுத்தியும் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 28ஆம் தேதி உலகப் பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், உலகப் பட்டினி தினத்தை முன்னிட்டு வரும் 28ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்துச் சட்டமன்ற தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி, பட்டினியில்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும், அனைவருக்கும் உணவு கிடைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி, உலகப் பட்டினி தினமான, வருகிற 28.05.2024 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்துச் சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

மாவட்ட, அணி, நகரம், ஒன்றியம், கிளை, மற்றும் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் உரிய தேர்தல் வழிகாட்டும் விதிமுறைகளைப் பின்பற்றிப் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி, மக்கள் நலப்பணியில் ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” என கூறப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். மக்களவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும், 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தான் ஒரே இலக்கு என்றும் அவர் தெரிவித்தார். இதையடுத்து, அதற்கான பணிகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் தொடங்கியுள்ளனர்.

அதேசமயம், கட்சி தொடங்குவதற்கு முன்பு கடந்த ஆண்டு, 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 234 தொகுதிகளிலும், முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளை அழைத்து நடிகர் விஜய் பாராட்டு விழா நடத்தினார். அவர்களுக்கு சான்றிதழும், தலா ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகையும் வழங்கினார். அதேபோல், உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தனது மக்கள் இயக்கத்தின் மூலம் நடிகர் விஜய் அன்னதானம் வழங்கினார்.

அதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டிலும் அந்த பணிகளை செய்ய தனது கட்சியினருக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளார். மேலும், கடந்த ஆண்டைப் போலவே தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக 10, 12ஆம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் பரிசுத் தொகையை தவெக தலைவர் நடிகர் விஜய் வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story