5.72 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்த வேட்பாளர்.! விவரம்..

By 
sasik1

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது.  இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. குறிப்பாக திருவள்ளூர் மக்களவை தொகுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

ஏனென்றால், திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் பாஜக வேட்பாளர் பொன் பாலகணபதியை விட 5 லட்சத்து 72 ஆயிரத்து 155 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சரித்திர சாதனை படைத்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 7,96,956 வாக்குகளும், பாஜக வேட்பாளர் பொன் பாலகணபதி 2,24,801 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி 2,23,904 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 1,20, 838 வாக்குகளும்  பெற்றுள்ளனர். 

தமிழக இளைஞரான சசிகாந்த் செந்தில் 2009-ல் கர்நாடகாவில் ஐஏஎஸ் பணியை தொடங்கினார்.  துணை ஆட்சியர், ஆட்சியராக 10 ஆண்டுகள் பணியாற்றினார். இதனையடுத்து கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ம் தேதி ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்கு மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட்டார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலை பாஜக சார்பில் தேர்தல் களப்பணிக்காக அனுப்பப்பட்ட அதே வேளையில், சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் சார்பில் கர்நாடகாவில் களமிறக்கப்பட்டார். திறப்பட செயல்பட்டு கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைய முக்கிய பங்காற்றினார். 

அதன்பிறகு காங்கிரஸ் கட்சியின் 'சென்ட்ரல் வார் ரூம்' தலைவராகவும் சசிகாந்த் நியமிக்கப்பட்டார். பின்னர் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை சரியான பயன்படுத்தி மாநிலத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். 

Share this story