புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைக்க கோரிய வழக்கு : சுப்ரீம் கோர்ட் அதிரடி முடிவு

By 
newp2

டெல்லியில் ரூ.850 கோடி மதிப்பில் புதிய பாராளுமன்ற கட்டிடம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி வருகிற 28-ந்தேதி திறந்து வைக்கிறார். ஆனால் பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

மேலும் திறப்பு விழாவை புறக்கணிக்க போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்து உள்ளன. இந்த நிலையில் பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கன்னியாகுமரியை சேர்ந்த வக்கீல் ஜெய்சுகீன் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகேஸ்வரி, நரசிம்மா அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். மேலும் இந்த வழக்கையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். நாட்டின் முதல் குடிமகனாக உள்ள ஜனாதிபதியே பாராளுமன்றத்தை கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் படைத்தவர் என்று மனுதாரர் கூறி உள்ளார்.

பாராளுமன்ற நிகழ்வை தொடங்கி வைப்பதையும், பாராளுமன்ற கட்டிடம் திறப்பையும் எப்படி தொடர்புபடுத்த முடியும்? நீங்கள் இந்த மனுவை என்ன நோக்கத்திற்காக தாக்கல் செய்துள்ளீர்கள்? இந்த மனுவை தாக்கல் செய்ததற்காக நாங்கள் உங்களுக்கு அபராதம் விதிக்கப் போகிறோம். நாங்கள் வழக்கை தள்ளுபடி செய்ய முடிவு எடுத்தால் மனுவை திரும்ப பெறுவதாக மனுதாரராகிய நீங்கள் சொல்கிறீர்கள். இந்த மனுவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை.

புதிய பாராளுமன்ற கட்டிடம் யாரை வைத்து திறக்க வேண்டும். எப்படி திறக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. எனவே மனுவை தள்ளுபடி செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள். இதன் மூலம் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறக்க தடை இல்லை என்பதை சுப்ரீம் கோர்ட்டு உறுதிப்படுத்தி இருக்கிறது. இதற்கிடையே வக்கீல் ஜெய்சுகீன் தனது மனுவை திரும்ப பெற்றார்.
 

Share this story