அரசு கோரிக்கையை ஏற்க, சுப்ரீம் கோர்ட் மறுப்பு..

By 
supreme3

பீகார் மாநிலத்தில் நடந்து வரும் நிதிஷ்குமார் அரசு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. முதல் கட்ட கணக்கெடுப்பு முடிந்து 2-வது கட்ட பணி நடந்து வருகிறது.

இதற்கிடையே, சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி, 'சமத்துவத்துக்கான இளைஞர்கள்' என்ற அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அதில், வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது' என கூறப்பட்டிருந்தது.

மனுதாரர் தரப்பு வக்கீல் முகுல் ரோஹத்கி வாதத்துக்குப் பிறகு மனுவை ஏற்றுக்கொள்ள நீதிபதிகள் மறுத்து விட்டனர். பாட்னா ஐகோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். அந்த மனுவை தாக்கல் செய்த 3 நாட்களுக்குள் பரிசீலித்து, முடிவு செய்யுமாறு பாட்னா ஐகோர்ட்டுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து, பாட்னா ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த பாட்னா ஐகோர்ட், பீகாரில் நிதிஷ்குமார் அரசு நடத்தி வரும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து பாட்னா ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் அரசு தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், அரசியலமைப்பின் 15 மற்றும் 16-வது பிரிவின் கீழ் சாதி அடிப்படையிலான தரவுகளை சேகரிப்பது அரசியலமைப்பு ஆணை என்றும், சாதிவாரி கணக்கெடுப்புக்கு தடை விதிக்கப்பட்டால் முழு பயிற்சியும் பாதிக்கப்படும். எனவே தடையை நீக்க வேண்டும் என கோரப்பட்டது.

இந்நிலையில், சாதிவாரி கணக்கெடுப்புக்கு தடைவிதித்த பாட்னா ஐகோர்ட்டின் உத்தரவுக்கு, தடைவிதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 14ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
 

Share this story