பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி : முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

By 
The task of vaccinating the booster Chief Stalin initiated

நாடு முழுவதும் இன்று திங்கட்கிழமை பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. 

2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 9 மாத இடைவெளிக்கு பிறகு 3-வது தவணை பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதாவது கடந்த ஏப்ரல் 14-ந் தேதிக்கு முன்பாகவே 2 தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்ட தகுதியான நபர்கள் இன்று முதல் 3-வது தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை 2 தவணை தடுப்பூசியை 62.4 சதவீதம் பேர் செலுத்திக் கொண்டுள்ளனர். இமாச்சலப் பிரதேசம், காஷ்மீர், மத்திய பிரதேசம், குஜராத், கேரள மாநிலங்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தியதில் முன்னணியில் உள்ளன.

தமிழகம் :

தமிழகத்தில் 58.3 சதவீதம் பேர் 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள். அந்த வகையில், தமிழகத்தில் 3-வது தவணை பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு 36.26 லட்சம் பேர் தகுதியானவர்கள் என்று தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 20.83 லட்சம் பேர் உள்ளனர். சுகாதாரத்துறையினர் 5.65 லட்சம் பேர் இருக்கிறார்கள். முன்களப் பணியாளர்கள் 9.78 லட்சம் பேர் உள்ளனர்.

இந்த 36 லட்சம் பேருக்கும் 3-வது தவணை பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 

இதற்கான நிகழ்ச்சி இன்று காலை சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி. நகரில் உள்ள இமேஜ் அரங்கத்தில் நடைபெற்றது.

முன்களப் பணியாளர்கள் ஆன நர்சுகளுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்குவதற்கு அடையாளமாக,15 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், நர்சுகள், முதியவர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டது.

இதையடுத்து, அதே இடத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கப்பட்டது. 

அதிலும் ஏராளமான முதியோர்கள், முன்களப் பணியாளர்கள் பங்கேற்று, பூஸ்டர் தடுப்பூசியை பெற்று வருகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், த.மோ.அன்பரசன், சேகர்பாபு, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

பூஸ்டர் தடுப்பூசி தொடங்கும் நிகழ்ச்சி நிறைவுபெற்றதும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் ஒப்பந்தம் பரிமாறப்பட்டது.

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்துக்கான காசோலைகளும் வழங்கப்பட்டது. இதே நிகழ்ச்சியில், பத்திரிகையாளர்களுக்கும் விரிவான காப்பீட்டுத் திட்டம் வழங்கப்பட்டது.

தமிழகத்தில், இன்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டதுபோல, மற்ற மாநிலங்களிலும் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 

4 லட்சம் பேர் :

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 

அவர்கள் விரும்பும் இடம், நேரத்தை தேர்வு செய்து பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்று ஏற்கனவே கூறப்பட்டு இருந்தது. முன்பதிவு செய்ய வேண்டியதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

ஏற்கனவே, என்ன தடுப்பூசி செலுத்தப்பட்டதோ, அதே தடுப்பூசியை 3-வது தவணையிலும் பெற உரிய ஆவணங்களை காட்ட வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தனர்.

அதன்படி, இன்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. தமிழகத்தில், இன்று திங்கட்கிழமை 4 லட்சம் பேருக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

71 லட்சம் தடுப்பூசிகள் :

தமிழகத்தில் இந்த மாதம் சுமார் 9 லட்சம் பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 1.5 லட்சம் பேருக்கு கோவேக்சின் தடுப்பூசியும் 3-வது தவணை தடுப்பூசியாக கொடுக்கப்பட வேண்டியதுள்ளது. 

அதற்கேற்ப தடுப்பூசிகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் தற்போது சுமார் 71 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

எனவே 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், முன்களப் பணியாளர்கள் தங்கு, தடையின்றி 3-வது தவணை தடுப்பூசி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

தனியார் மருத்துவமனைகள், தங்கள் மருத்துவமனை ஊழியர்களுக்கு தாங்களே பூஸ்டர் தடுப்பூசி வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தயங்காமல் 3-வது தவணை பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டால், தங்களை தற்காத்துக் கொள்ள முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். உடல்நலப் பாதிப்புகள், இணை நோய்கள் இருந்தால், டாக்டர்களின் ஆலோசனையை பெற்றுக் கொள்ளலாம்.

அதற்காக மருத்துவரிடம் இருந்து எந்தவொரு சான்றிதழையும் பெற்று சமர்ப்பிக்கத் தேவையில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. 

60 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு உரிய தவணை காலத்தில், பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

6 கோடி பேர் :

நாடு முழுவதும் சுமார் 6 கோடி பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்களாக பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 

அவர்களுக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி, தகவல் தெரிவித்து, வரவழைத்து முன்னெச்சரிக்கை பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி ஓரளவு போட்டு முடிக்கப்பட்டதும், 45 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும்.
*

Share this story