குஷ்பு பேசியதில் தவறு இருப்பதாக தெரியவில்லை: ஈவிகேஎஸ். இளங்கோவன் கருத்து

By 
evks55

நடிகை குஷ்பு அண்மையில் பேசிய சில கருத்துக்கள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் குஷ்புவின் கருத்தில் எந்த விதமான தவறும் இருப்பதாக தெரியவில்லை என்று கூறியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

நடிகர் மன்சூர் அலிகானுடைய கருத்து இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதை கண்டித்து நடிகை குஷ்பு அவர்கள் சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார். அப்பொழுது அவரை எதிர்த்து பலர் கொச்சையான கருத்துக்களை வெளியிட்ட நிலையில், "திமுக குண்டர்கள் இப்படியான மோசமான மொழியைத்தான் பயன்படுத்துவார்கள், அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது இதுதான், என்னால் உங்களைப்போல சேரி மொழியில் பேச முடியாது என்று கூறி தனது கருத்தை வெளியிட்டிருந்தார். 

இந்நிலையில் அவர் சேரி என்று பயன்படுத்திய வார்த்தைக்காக பலரும் அவருக்கு கண்டனம் தெரிவிக்க துவங்கினர். குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கனகராஜ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "நீங்கள் தவறு செய்துள்ளீர்கள் குஷ்பூ, ஒருவேளை அர்த்தம் தெறியாமல் நீங்கள் சேரி என்ற சொல்லை பயன்படுத்தியிருந்தால் அந்த பதிவை நீக்கிவிடுங்கள் என்று கூறினார். 

அதேபோல பா. ரஞ்சித் அவர்களினுடைய நீலம் பண்பாட்டு மையமும் குஷ்புவின் "சேரி மொழி" என்ற சொல்லை வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறி எதிர்ப்புகளை தெரிவித்து இருந்தது. பல எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டு அதில் சேரி என்ற சொல்லுக்கான அர்த்தத்தையும் வெளியிட்டு இருந்தார் குஷ்பு. 

கடந்த நவம்பர் மாதம் இது மிகப்பெரிய பேசுபொருளாக மாறிய நிலையில், தற்போது குஷ்புவின் பேச்சுக்கு தனது கருத்தை தெரிவித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளரிடம் பேசிய அவர் 5 மாநில சட்டசபை தேர்தலில் குறைந்தது 4 மாநிலங்களிலாவது காங்கிரஸ் கட்சியை மாபெரும் வெற்றி பெறும் என்று தெரிவித்தார். 

அதேபோல மக்களவைத் தேர்தலிலும் தமிழகம் புதுச்சேரியில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளை வெற்றி பெற்றே தீரும் என்றும் அவர் கூறினார். தமிழக அரசு நிறைவேற்றியுள்ள பல நலத்திட்டங்களால் முதல்வர் ஸ்டாலின் பின்னால் பக்க பலமாக தமிழக பெண்கள் அணிவகுத்து நிற்கிறார்கள் என்று கூறியவர், சென்னையில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மாநகராட்சி துரிதமாக செயல்பட்டு சீர் செய்து வருவதாகவும் கூறினார். 

அதேபோல நடிகை குஷ்புவின் கருத்து குறித்து கேள்வி எழுப்பிய பொழுது நடிகை குஷ்பூ சேரி குறித்து தெரிவித்த கருத்தில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் அவரது பேச்சின் முழு விவரம் எனக்கு தெரியாது என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. 

Share this story