இது எனது அரசியல் எதிர்காலம் சார்ந்த விஷயம்: உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம்..  

By 
opsfeel

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் நீக்கத்தை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு பொதுக்குழு தீர்மானங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 

இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றது. இறுதியில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. ஆகையால் தடை விதிக்க முடியாது என கூறி  ஓபிஎஸ் தரப்பின் மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்.வி.என்.பாட்டி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில், மூன்று முறை முன்னாள் முதல்வராக இருந்திருக்கிறேன். அடிப்படை உறுப்பினர்களால் அதிமுக ஒருங்கிணைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். 

நான் பங்குபெறாத பொதுக்குழு கூட்டத்தில் தன்னை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று வாதிடப்பட்டது. மேலும், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் கட்சியின் சின்னம் கொடி ஆகியவற்றை பயன்படுத்தவும் அனுமதிக்க வேண்டும். இது எனது அரசியல் எதிர்காலம் சார்ந்த விஷயம் என்று வாதிட்டார். 

இந்த விவகாரத்தை விரிவாக விசாரிக்க வேண்டும், தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை ஜனவரி 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஏற்கனவே இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பு கேவியட் மனு  தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

 

Share this story