மத்திய வெளியுறவுத்துறை மூலம், தமிழக அரசு உடனடி தீர்வு காண வேண்டும் : ஓபிஎஸ் வலியுறுத்தல்

Through the Central Foreign Office, the Government of Tamil Nadu must find an immediate solution OPS insistence

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

18.12.2021 அன்று ராமேஸ்வரத்தில் இருந்து 570 படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் அனுமதி பெற்று மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குள் சென்றதாகவும், 

அவர்கள் கச்சத்தீவு அருகே, இந்திய கடல்பகுதியில் நேற்று நள்ளிரவு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் செல்வம், வினால்டல், சார்லஸ், வெல்தாஸ், லியோ ஆகியோருக்குச் சொந்தமான 6 விசைப்படகுகளுடன் 43 மீனவர்களை சிறை பிடித்தனர்.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவர்களை இந்த மாதம் 31-ந்தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்த சம்பவம் நடந்த ஒரு சில மணி நேரங்களில், மேலும் 12 மீனவர்கள் இரண்டு படகுகளுடன் இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள், தலைமன்னாருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், விசாரணை மற்றும் கொரோனா தொற்று குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டவுடன், அவர்கள் உரிய அதிகாரிகளிடம் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் செய்திகள் வருகின்றன. 

தமிழக மீனவர்களை அடிக்கடி சிறைபிடித்து துன்புறுத்தும், இலங்கை கடற்படையினருக்கு அ.தி.மு.க. சார்பில் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மீன்பிடித் தொழிலையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை, சர்வதேச கடல் எல்லையை தாண்டினார்கள் என்ற காரணத்தைச் சொல்லி அடிக்கடி அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் நிகழ்வுகள் தமிழ்நாட்டு மீனவர்களிடையே ஒருவித அச்ச உணர்வையும், அனுமதியின்மையையும், மனஉளைச்சலையும் ஏற்படுத்துகிறது.

இதன் விளைவாக, ஒவ்வொரு முறையும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும்போதும் ஒருவித அச்ச உணர்வோடுதான் மீனவர்கள் கடலுக்குச் செல்லக்கூடிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. 

இந்த வி‌ஷயத்தில், ஏதோ சம்பிரதாயத்திற்காக கடிதம் எழுதுவது அல்லது தொலைபேசியில் பேசுவது என்ற பணியைத்தான் தமிழ்நாடு அரசு செய்து கொண்டிருக்கிறதே தவிர, மத்திய அரசுக்கு தேவையான அழுத்தத்தைக் கொடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி வருங்காலங்களிலாவது நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகக் தெரியவில்லை.

தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பது மற்றும் மீன்பிடி உரிமையை காப்பது ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசிற்கு இருக்கிறது. இந்தக்கடமையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்பது தான் தமிழக மீனவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாகக் கவனம் செலுத்தி, சிறைபிடிக்கப்பட்ட 55 மீனவர்ளை விடுவிக்கவும், உடமைகளை அவர்களிடம் ஒப்படைக்கவும், 

இது போன்ற நிகழ்வுகள் இனிமேல் நிகழாமல் இருக்கவும் உரிய நடவடிக்கையை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலமாக எடுக்க வேண்டுமென்று அ.தி.மு.க.வின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
*

Share this story