தடுப்பூசி போடும் திட்டம் : மத்திய சுகாதாரத்துறை விளக்கம்

Vaccination Program Interpretation of the Federal Department of Health

கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, தடுப்பூசிகள் போடும் பணிகள் தொடங்கியது. 

அடுத்த கட்டமாக, மே 1-ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தன.

பள்ளி மாணவர்கள் :

இந்நிலையில், 15 வயது முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் கடந்த 3-ந்தேதி தொடங்கியது. இந்த பிரிவினரில் 7 கோடியே 40 லட்சத்து 57 ஆயிரம் பேர் உள்ளனர்.

இவர்களில் 3 கோடியே 59 லட்சத்து 30 ஆயிரத்து 929 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 4 வாரங்களில் அவர்களுக்கு 2-வது டோஸ் தடுப்பூசி போடப்பட உள்ளது.

இதுவரை, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத இந்த வயது பிரிவினருக்கு, இந்த மாத இறுதிக்குள் தடுப்பூசி போடப்பட்டு விடும். அவர்களுக்கு 2-வது டோஸ் தடுப்பூசி பிப்ரவரி இறுதிக்குள் போடப்பட உள்ளது. 

இந்த வயதினர் அனைவரும் பள்ளி மாணவர்கள் என்பதால், அவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது.

மேலும், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி கடந்த 10-ந்தேதி முதல் போடப்பட்டு வருகிறது. 

இதுவரை, 50 லட்சத்து 84 ஆயிரத்து 410 பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர்.

மார்ச் மாதம் :

இந்நிலையில், 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் வருகிற மார்ச் மாதம் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது.

இதனை தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழு தலைவர் டாக்டர் என்.கே.அரோரா தெரிவித்தார். 

அவர் கூறுகையில், '12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் மார்ச் மாதம் தொடங்க வாய்ப்புள்ளது.

அதுசார்ந்த கொள்கை ரீதியிலான முடிவை அரசு மேற்கொள்ளும். அந்த வயது வரம்பில் சுமார் 7.5 கோடி சிறுவர்கள் உள்ளனர்' என்றார்.

சுகாதாரத்துறை விளக்கம் :

இந்நிலையில், இந்த அறிவிப்புக்கு மத்திய சுகாதார அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து, சுகாதாரத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

அதில், '12 வயது முதல் 14 வயதிலான சிறுவர்களுக்கு இப்போதைக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இல்லை. 

இது தொடர்பாக, அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை' என்று தெரிவித்துள்ளது.
*

Share this story