பாகிஸ்தான் முழுவதும் வன்முறை : ஒருவர் பலி; பதற்ற நிலை..
 

By 
pak99

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் மீது ஊழல், பயங்கரவாதம், வன்முறை உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கு விசாரணைக்காக அவர் கோர்ட்டில் ஆஜராக வந்தார்.

இதற்கிடையே ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக இம்ரான்கான் நேற்று மதியம் இஸ்லாமாபாத் கோர்ட்டுக்கு வந்தார். அப்போது அங்கு வந்த துணை ராணுவத்தினர் இம்ரான்கானை கைது செய்து குண்டுக்கட்டாக கோர்ட்டில் இருந்து இழுத்து சென்றனர். அவரை வாகனத்தில் ஏற்றி ராவல் பிண்டியில் உள்ள ஊழல் தடுப்பு போலீஸ் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

ஊழல் வழக்கு ஒன்றில் இம்ரான்கான் கைது செய்யப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கோர்ட்டில் இம்ரான் கான் இருந்து அறையில் ஜன்னல், கண்ணாடி கதவுகளை உடைத்த துணை ராணுவத்தினர் அவரை தாக்கி அழைத்துச் சென்றனர் என்று தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர்கள் தெரிவித்தனர். இம்ரான் கான் கைதை அடுத்து அவரது கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர்.

சாலைகளில் திரண்ட அவர்கள் இம்ரான் கான் கைதை கண்டித்து கோஷமிட்டபடி மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன. பல இடங்களில் போலீசாருக்கும், போராட்டகாரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டது.

இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. மேலும் தண்ணீரும் பீய்ச்சி அடிக்கப்பட்டது. சாலைகளில் டயர்களை போட்டு எரித்து போராட்டக்காரர்கள், பல வாகனங்களுக்கு தீவைத்தனர். தலைநகர் இஸ்லாமாபாத், கராச்சி, பெஷாவர், லாகூர், ராவல்பிண்டி, பைசலாபாத், முல்தான், குஜ்ரன்வாலா உள்பட அனைத்து நகரங்களிலும் போராட்டம்- வன்முறை நடந்தது.

இதற்கிடையே லாகூரில் உள்ள ராணுவ தளபதிகள் இல்ல வளாகத்துக்குள் இம்ரான்கான் ஆதரவாளர்கள் நுழைந்து சூறையாடினர். அங்கு ராணுவ தளபதிகள் வீடுகளில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர். ஜன்னல் கண்ணாடி கதவுகளை உடைத்தனர். ராணுவ கமாண்டர் இல்லத்தை சூறையாடிய தோடு அங்கிருந்த உணவு பொருட்கள் மற்றும் மயில்களை எடுத்துக்கொண்டு சென்றனர். ராவல் பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்துக்குள்ளும் புகுந்து சூறையாடினர். அங்கு நுழைவு வாயில் கதவு அடித்து நொறுக்கப்பட்டது.

போராட்டம், வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்தினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர். ஆனாலும் இம்ரான்கான் கட்சியினர் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலையும் போராட்டம், வன்முறை தொடர்ந்து வருகிறது.

பெஷாவரில் ரேயோ பாகிஸ்தான் கட்டிடத்துக்கு தீவைக்கப்பட்டது. பைசலா பாத்தில் உள்ள உள்துறை மந்திரி ராணா சனாவுல்லா வீடு மீது கற்கள் வீசப்பட்டன. பல நகரங்களில் போலீசார் -போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிகிறது. இதனால் பாகிஸ்தான் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையே வன்முறையில் ஒருவர் பலியாகி இருக்கிறார். குவாட்டா நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

வன்முறை காரணமாக பாகிஸ்தானில் இணையதளம் முடக்கப்பட்டு இருக்கிறது. டுவிட்டர், பேஸ்புக் கணக்குகளை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் இம்ரான் கான் கைதை கண்டித்து இன்று தலைநகர் இஸ்லாமாபாத்தில் போராட்டம் நடத்த திரள வேண்டும் என்று அவரது கட்சி அழைப்பு விடுத்துள்ளது.



 


 

Share this story