கொஞ்ச நாள் பொறு தலைவா, புழல்ல அறை தருவா : ஓபிஎஸ் தரப்பு எச்சரிக்கை 

marudhu106

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

'வருமான வரித்துறை, அமலாக்க பிரிவு, சி.பி.ஐ என்னும் வரிசையில் பா.ஜ.க.வின் அரசியல் சித்து விளையாட்டுகளுக்கு நீதித்துறையும் பயன்படுத்தப்படுகிறது என்பது அப்பட்டமாகவே தெரிகிறது.

பதினோரு எம்.எல்.ஏக்களை மட்டுமே தன் வசம் வைத்திருந்த அன்றைய பா.ஜ.க. ஆதரவு பன்னீர்செல்வத்துக்கு, இரட்டை இலை சின்னத்துக்கான உரிமை தொடங்கி, பல சாதகங்கள் அன்று கிடைத்தன என்றால்..

இப்போது, அந்த அரவணைப்பு எடப்பாடியை நோக்கி நகர்ந்து விட்ட நிலையில்.. எடப்பாடி கைகளில் வேண்டியதை தருகிற அலாவுதீனின் அற்புத விளக்கு இருப்பதற்கு சமம் தானே.

ஆனாலும், ஆட்டுக்கு தீனி போட்டு வளர்க்கும் பாசம் எல்லாம், தேர்தல் திருவிழா வரைக்கும்தான் என்பது, ஆட்டுக்கும் அதனை ஏற்பாடு செய்திருக்கும் ஆட்டுக்குட்டிக்கும் பொருந்தும் தானே.

கட்சியை வைத்து காசு திருடுவது; திருடிய காசை வைத்து கட்சியையே திருடுவது என்கிற புதிய அத்தியாதத்தை எடப்பாடி பைனான்சியர் ஏற்படுத்தப் பார்க்கிறார்.

ஆனால், எம்.ஜி.ஆர். அம்மா ஆகியோரது ஆன்மா அவரை புழல்சிறைக்கு அனுப்புமே தவிர, ஒரு போதும் பொதுச்செயலாளர் ஆக விடாது.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். 

Share this story