சகோதரத்துவம் வளர உறுதியேற்போம் : ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிக்கை

By 
Commitment to Fraternity Grow OPS-EPS Report

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

“தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள்” என்று பிரகடனப்படுத்தி, தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த உத்தமத் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனார். 

தலைசிறந்த பேச்சாளராகவும், ஆன்மீகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்ட தியாகியாகவும் விளங்கியவர்.

இதுபோன்று, மேலும் பல்வேறு சிறப்புகளுக்குரிய உன்னதத் தலைவரின் 114-வது ஜெயந்தி விழா கொண்டாடப்படும் இவ்வேளையில், அவரது பல்வேறு சிறப்புகளை நினைவு கூர்வதிலும் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

தேவர் திருமகனார் அடக்குமுறைகளைக் கண்டு அஞ்சாத சிங்கமாய், குணத்திலே சொக்கத்தங்கமாய், ஈகையின் திருவுருவமாய் திகழ்ந்து, மக்கள் மனங்களில் தெய்வமாய் அன்றும், இன்றும், என்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர்.

அரசியலிலும் சரி, ஆன்மிகத்திலும் சரி, இரண்டிலும் சுடர் விட்டு பிரகாசித்தவர் தேவர் திருமகனார். 

அவர் மக்களுக்கு ஆற்றிய மகத்தான பணிகளை, சேவைகளைப் போற்றும் விதமாகத்தான் அம்மா முதலமைச்சராக இருந்தபோது, 1994-ல் சென்னை நந்தனத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு வெண்கலச் சிலை அமைத்தார்.

அம்மா 2010-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது, முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்கக்காப்பு அளிக்கப்படும் என்று அறிவித்து 9.2.2014 அன்று 13 கிலோ எடை கொண்ட தங்கக் காப்பை அணிவித்து சிறப்பு செய்தார்.

எதற்கும் அஞ்சாத சிங்கமான தேவர் திருமகனார் பிறந்ததும் அக்டோபர் மாதம் 30-ந்தேதிதான், மறைந்ததும் அக்டோபர் 30-ந்தேதிதான் என்று நினைக்கின்றபோது வியப்பே மேலோங்குகிறது.

மகத்தான தலைவர் தேவர் திருமகனாரின் 115-வது ஜெயந்தி விழாவில் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்க, தேசியமும், கலாச்சாரமும் தழைத்தோங்க, நாட்டு மக்களிடையே மத, இன மோதல்கள் குறைந்து சகோதரத்துவம் வளர இந்த நன்னாளில் உறுதி ஏற்போம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Share this story