எங்களை அழிக்க முடியாது : கெஜ்ரிவால் ஆவேசம்..

மதுபான கொள்கை ஊழலின் உச்சக்கட்ட நடவடிக்கையாக டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் மீது சி.பி.ஐ.யின் பார்வை படிந்துள்ளது. இதற்கிடையே, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சிபிஐ சம்மன் அனுப்பியது.
இதையடுத்து, இன்று மதியம் 12 மணியளவில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் மதுபான கொள்கை ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதற்கு அவர் பதில் அளித்தார்.
இதைத்தொடர்ந்து, சிபிஐ விசாரணை 9 மணி நேரம் நீடித்த நிலையில் விசாரணை தற்போது நிறைவடைந்துள்ளது. மதியம் 12 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 9 மணி வரை நீடித்து தற்போது நிறைவடைந்ததையடுத்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த கெஜ்ரிவால், சிபிஐ அதிகாரிகள் என்னிடம் ஒன்பதரை மணி நேரம் விசாரணை நடத்தினர். அவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் நான் பதிலளித்தேன். மதுபான கொள்கை முறைகேடு என்பது பொய்யான வழக்கு. அவர்கள் ஆம் ஆத்மி கட்சியை அழிக்க நினைக்கின்றனர். ஆனால் மக்கள் எங்களுடன் உள்ளனர் என தெரிவித்தார்.