பாதிக்கப்பட்ட மக்களுக்கு கழகத்தின் சார்பில் உதவிக்கரம் நீட்டுவோம்: எடப்பாடி பழனிசாமி

By 
eps8

தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வரும் நிலையில் அரசு தேவையான உதவிகள் செய்து வருகிறது.இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கழகத்தின் சார்பில் உதவிக்கரம் நீட்டுவோம் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிசாமி தெரிவித்துள்ளதாவது:

''கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு விரைந்து உணவுப் பொருட்கள், மருத்துவ உதவி போன்ற நிவாரண உதவிகளை போர்க்கால அடிப்படையில் மக்களுக்கு வழங்கிட இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், சென்னையில் ஏற்பட்டதுபோல் கவனக் குறைவுடன் மக்களை பாதிக்கப்படவிடாமல், மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள், காவல் பணி அதிகாரிகள் ஆகியோரின் அனுபவங்களைப் பயன்படுத்தி, சீர்குலைந்த சாலைகள், தகவல் தொடர்புகள் மற்றும் நிவாரணப் பணிகளை திட்டமிட்டு துரிதமாக செயல்படுத்த வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

மேலும், கனமழையில் பொதுமக்கள் கவனத்துடன் பாதுகாப்பாக எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்வதுடன், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிவாரண உதவிகளை வழங்கிட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளை கேட்டுக்கொள்கிறேன்''என்று தெரிவித்துள்ளார்.

Share this story