29 பைசாவை மூட்டை கட்டும் வரை நாங்கள் தூங்கமாட்டோம்: உதயநிதி பிரசாரம்..

By 
29

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து நேற்று முதல் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று அண்ணா நகர் பகுதியில் பிரசாரத்தை மேற்கொண்ட உதயநிதி பேசுகையில்,

கடந்த 19-நாட்களாக தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றேன். ஒவ்வொரு தொகுதியிலும்  பிரசாரம் செய்யும் போது வேட்பாளரை பார்த்து கலைஞரின் ஆசி பெற்ற வேட்பாளர் என்று சொல்வேன். ஆனால் தூத்துக்குடியை பொறுத்த வரையில் அப்படி சொல்ல முடியாது. ஏனென்றால் இந்த தொகுதியில் நிற்பதே கலைஞர்தான். எனவே கனிமொழியை குறைந்தது 6-லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கடந்தமுறை வெற்றிபெற்ற கனிமொழி ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இந்தியா கூட்டணி வெற்றி பெற்று வந்தவுடன் கேஸ் சிலிண்டர் 500-ரூபாய்க்கும், பெட்ரோல் விலை 70-ரூபாய், டீசல் விலை 65-ரூபாய்க்கும் கொடுக்கப்படும் என நமது முதல்வர் வாக்குறு அளித்துள்ளார். ஏனென்றால் அவர் கலைஞரின் மகன். செய்வதை மட்டும்தான் சொல்வார். யார் காலிலும் விழுந்து முதல்வர் ஆகவில்லை. அதேபோல் யாருக்கும் துரோகம் செய்து ஆட்சிக்கு வரவில்லை.

தூத்துக்குடி வளர்ச்சி திட்டத்திற்க்காக சுமார் 85-ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். துப்பாக்கி சூட்டினை டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று சொன்ன எடப்பாடி பழனிச்சாமி நாங்கள் இல்லை. பெண்களை உயர்த்த வேண்டும் என்றுதான்   முதல்வர் பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் சுமார் 3 ஆயிரம் மாணவிகளுக்கு கல்வி உதவிதொகை மாதம் ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன் முதலாக காலை உணவு திட்டம் கொண்டு வந்து நல்ல  வரவேற்பை பெற்றவர் நமது முதல்வர். கனடா நாட்டு பிரதமரை நமது முதல்வர் கொண்டு வந்த காலை உணவு திட்டத்தை வரவேற்று வாழ்த்தி கனடா நாட்டிலும் இந்த திட்டத்தை கொண்டு வர ஆலோசனை செய்து வருகின்றார்.

கடந்த டிசம்பர் மாதம் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பெய்த மழை வெள்ளத்தின் போது 10-அமைச்சர்களை தமிழக முதல்வர் அனுப்பினார். அனைவரும் இங்கிருந்து தேவையான உதவிகளை செய்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின் தான் சென்றோம். மழை வெள்ளத்தை நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார். மழையினால் உடைந்த பாலங்கள், கரைகளை சரிசெய்ய 218-கோடி  ரூபாய் தமிழக முதல்வர் ஒதுக்கி சரிசெய்தார். 

நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்தது. அதனை இங்கு இருந்த அப்போதைய அரசும் எதிர்க்காமல் இருந்தனர். இதனால் பல மாணவர்கள் உயிர் பலியானர்கள். தமிழக முதல்வர் மகளிர் உரிமை தொகை, மக்களை தேடி மருத்துவம் என என்னற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளார். மத்திய அரசையும், அதிமுக கட்சியையும் விரட்டி அடிக்காமல் விடமாட்டோம்.

ஒன்றிய அரசுக்கு தற்போது ஒரு பெயர் வைக்கப்பட்டுள்ளது. 29 பைசா. அந்த 29 பைசாவை மூட்டை கட்டி வீட்டிற்கு அனுப்பி தூங்க வைக்கும் வரை திமுகவினருக்கு தூக்கம் வராது. தமிழ்நாட்டில் 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும். அதிலும் தூத்துக்குடியில் போட்டியிடக்கூடிய கனிமொழி கருணாநிதியை அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Share this story