"விருப்பப்பட்டதை அணியுங்கள்".. ஹிஜாப் தடை விரைவில் நீக்கப்படும்: காங். அரசு அறிவிப்பு..

By 
hijap

கடந்த 2022 ஆம் ஆண்டு கர்நாடகாவின் உடுப்பி பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில், வகுப்புக்கு ஹிஜாப் அணிந்து சென்ற மாணவிக்கு அனுமதி மறுக்கப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது.

இந்திய அளவில் மிகப்பெரிய அதிர்வல்களை இந்த சம்பவம் ஏற்படுத்திய நிலையில் உயர் நீதிமன்றம் வரை இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து கர்நாடகாவில் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டு, அங்குள்ள பல கல்வி நிறுவனங்கள் ஹிஜாப் அணிய தடையை விதித்தது அனைவரும் அறிந்ததே. 

நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கும் தோல்வியுற்று ஹிஜாப் தடை நீக்கப்படாமல் இருந்தது, இந்த சூழ்நிலையில் கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் கர்நாடகாவில் பாஜகவை வெற்றி கொண்டு காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. இரண்டாவது முறையாக முதல்வர் சித்தராமையா தற்பொழுது அங்கு முதல்வராக பதவி வகித்து வருகிறார். 

இந்நிலையில் மைசூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய முதல்வர் சித்தராமையா, கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய ஏற்கனவே விதிக்கப்பட்டு இருந்த தடையானது தற்பொழுது திரும்பப் பெறப்பட உள்ளது என்று கூறினார். இனி நீங்கள் உங்கள் விருப்பம் போல் ஆடைகளை அணியலாம் ஹிஜாப் அணிந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லலாம்.

ஆடை அணிவதும், உணவு உண்பதும் ஒருவருடைய தனிப்பட்ட விருப்பம். ஆகவே மக்கள் தங்களுக்கு விருப்பமான உடையை அணியவோ, அல்லது உணவை உண்ணவோ யாரும் தடை விதிக்க முடியாது என்று அவர் கூறினார். இது மட்டுமல்லாமல் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்த அவர், பிரதமர் நரேந்திர மோடி மக்களை ஜாதி மற்றும் உடை அடிப்படையில் பிரிக்கிறார். இது சமுதாயத்தை உடைக்கும் வேலை என்று அவர் கடுமையாக சாடி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Share this story