இடைத்தேர்தல் சொல்லக் காத்திருக்கும் விடைகள் என்ன? : மருது அழகுராஜ் விளக்கம் 

By 
erodu6

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

ஒரு பலவீனமான மனிதர்; கம்ப இராமாயணம் எழுதியது சேக்கிழார் என்று நம்பும் அளவிலான ஒரு தற்குறி..

தன் மீதான கொலை கொள்ளை மற்றும் லஞ்ச ஊழல் வழக்குகளை நினைத்து நினைத்து நாளெல்லாம் நடுங்கும் நபர்..

ஆட்சியில் உள்ளவர்களை பகைத்தால், குற்ற ரேகைகள் படிந்த தன்னை ஆயுளெல்லாம் சிறைப்படுத்தி விடுவார்களே என்று பயந்து நடுங்கும் ஒருவர்..

இப்படி...அந்த ஒருவர் தான், தன்னை எதிர்க்கும் பிரதான கட்சிக்கு தலைவராக இருக்க வேண்டும் என  தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் விரும்புகிறார்.

அவரது இந்த எதிர்பார்ப்பில் ஒப்பீட்டு அளவில் அவரைக் காட்டிலும் எவ்வகையிலும் உயர்ந்து நிற்காத ஒருவராக.. பத்துப் பொருத்தத்தோடு இருப்பவர் நம்ம குத்துக்கோல் பழனிச்சாமி  என்பதால்,

அவர் எதிர்கட்சித் தலைவராக இருந்தால்தான், திமுக தொடர்ந்து ஆளுங்கட்சியாக இருக்க முடியும் என கருணாநிதி குடும்பமே கருதுகிறது.

இதற்காகவே, கடந்த ஆட்சிக் கால நெடுஞ்சாலை துறை ஊழல்கள், கொடநாடு விவகாரம், ஸ்மார்ட் சிட்டி வழக்கு, காணாமல் போன நிலக்கரி ரகசியம் என எடப்பாடி மற்றும் அவரது ஊழல் சகாக்கள் மீதான அனைத்து வழக்குகளும், பூச்சாண்டி காட்ட மட்டுமே பயன்படுத்தப்படும் வெற்று பொம்மைகளாகவே வைக்கப்பட்டிருக்கின்றன.

ஆக மொத்தத்தில், பழனிச்சாமியை வைத்தே தங்கள் அரசியல் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தல் இல்லாமல் பார்த்துக்கொள்ள திமுக  நினைக்கிறது.

இந்த  கணக்குடன் முன்னெடுக்கப்படும் ஈரோடு சதுரங்க வேட்டைக் களத்தில், பெரியார் மண் எழுதப்போகும் தீர்ப்போ, மேற்படி தந்திர திட்டங்களை எல்லாம் தவிடு பொடியாக்கும் மந்திரத் தீர்ப்பாக அமையப் போகிறது என்பது மட்டும் நிச்சயம்.

ஆம்..மகேசன் தீர்ப்பாக மக்கள் தீர்ப்பு அமையப் போகிறது என்பது சத்தியம்.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். 
 

Share this story