ராமர் கோவில் விவகாரத்தில் ஜெயலலிதா கூறியது என்ன.? ஆடியோ வெளியிட்டு அண்ணாமலைக்கு ஜெயக்குமார் பதிலடி

By 
ajaj

ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் எனவும், கரசேவைக்கு ஜெயலலிதா ஆட்களை அனுப்பியதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழிசை தெரிவித்துள்ளனர். இதற்கு அதிமுகவினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையல் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ராமர்கோயில் விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா பேசிய பதிவை ஆடியோவாக வெளியிட்டுள்ளார்.

அதில், பாபர் மசூதியை இடித்து விட்டு ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதில் விஷ்வ இந்து பரிஷத் பிடிவாதமாக உள்ளது. இந்துக்களின் மது உணர்வுகள் தூண்டி ராமர் கோயில் கட்டுவதற்கு விஷ்வ இந்து பரிஷர் ஆதரவை தெரிவித்து வருகிறது. பாபர் மஸ்ஜித்தை இடிக்க கூடாது என பாதுகாப்பு குழு ஆரம்பிக்கப்பட்டு ஆதரவை திரட்டி வருகிறது.

அரசியல்வாதிகள் லாபத்தை கருத்தில் கொண்டு ஒரு சாரார் இந்துக்கள் பக்கமும், மற்றொரு தரப்பினர் முஸ்லிம் தரப்போடும் இணைந்து கொண்டு பிரச்சனையை வளர்த்து வருகின்றனர். இதனால் தான் இந்த பிரச்சனையில் எந்த வித முடிவும் எடுக்க முடியாமல் நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறது. எனவே தான் இரு மதங்களை சார்ந்த தலைவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து தீர்வு காண வேண்டும் என்ற முடிவு எடுக்க வேண்டும் என வற்புறுத்தி வருகிறோம். இதைத்தான் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். நாட்டிற்கும் நல்லது. எனவே இந்த பிரச்சனையை தேர்தல் பிரச்சனையாக மாற்ற வேண்டாம் என ஜெயல்லிதா அந்த ஆடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.  

இதனையடுத்து ஜெயக்குமார் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், இரு  மதங்களுக்கும் நடுநிலையாகவே தனது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துள்ளார். இது தான் அம்மா அவர்களின் அன்றைய உண்மையான நிலைப்பாடு. அந்த செய்தித்தாளில் வந்தது இந்த செய்தித்தாளில் வந்தது என அறமற்று கருத்துகளை பேசுவது அரசியல் முதிர்ச்சியின்மையை மக்களுக்கு காட்டுகிறது. அவர் இன்று இல்லை என்றவுடன் அவதூறு பரப்பி அவரை கலங்கபடுத்த நினைப்பவர்கள் காணாமல் போவார்கள்.

ஒருவரது தெய்வ நம்பிக்கையை மத நம்பிக்கையாக திரித்து மத தலைவராக மாற்ற நினைப்பது தான் பாஜகவின் எண்ணம்! ஒரு தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக ஒரிசாவில் வளர கூடாது என இனத்தை வைத்து அடையாளபடுத்தி பிளவுபடுத்த நினைப்பதும், மதங்கள் கடந்து எல்லோரும் அம்மாவாக எண்ணுகிற மாபெரும்‌ சமுகநீதி காத்த தலைவரை ஒரு மத தலைவர் என சொல்லி மதத்தால் பிளவுபடுத்த நினைப்பதும் தான் பாஜகவின் கொடூர கொள்கை!

தங்கள் சாதனைகளை தங்கள் தலைவர்களை பற்றி பேச முடியாமல் அம்மா அவர்கள் மீது அவதூறு பரப்பி அண்ணாமலை,தமிழிசை போன்றோர் விளம்பர தேடும் முயற்சி வீணாகும் தவிர விவாதம் ஆகாது. முல்லை பெரியாறு விவகாரம்,மேகதாது-காவிரி விவகாரம்,பாலாறு விவகாரம் என தமிழ்நாட்டை சுற்றி மும்முனையிலும் இருந்து தமிழ் மண்ணிற்கு பேராபத்து நேர உள்ளது. இதில் இருந்து திசை திருப்பி திமுக அரசை காப்பாற்றவும்,தங்கள் டெல்லி ஓனர்களை நோக்கி எந்த கேள்வியும் வரக்கூடாது என்பதற்காகவும்,தான் ஒரு 'Proud Kannadiga' என்பதற்காகவும் இந்த அவதூறை அண்ணாமலை கையில் எடுத்துள்ளார். மதவெறி கொண்ட யானையை விட 'மத'வெறி பிடித்துள்ள பாஜக நாட்டிற்கு ஆபத்தானது என்பது அண்ணாமலை போன்றோரின் பேச்சுகளில் இருந்து உணர முடிகிறது.

ஒற்றுமையும் ஒருமைப்பாடும் மிக்க தேசத்தை துண்டாட நினைப்பதை விட்டுவிட்டு மக்கள் பிரச்சினைகளை பேசுவதே நாட்டின் நலம் என்பதை எத்தனை ஜென்மங்கள் கழித்து இந்த பாஜக உணரப் போகிறதோ? தமிழ் மக்களின் மனங்களை வென்று இன்றும் அன்னையாக நிற்கும் அம்மாவின் புகழ் என்றும் இந்த மண்ணில் நிலைத்து நிற்கும்! என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

Share this story