பிரதமருக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு? : ராகுல் கேள்வி

rahul47

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து மூன்று நாட்கள் முடங்கிய நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. மக்களவையில் கேள்வி நேரத்துடன் அவை நடவடிக்கை தொடங்கிய நிலையில், அதானி குழும பிரச்சினையை எதிர்க்கட்சிகள் எழுப்ப முயன்றனர்.

அதற்கு கேள்வி நேரத்தை பயன்படுத்துமாறு சபாநாயகர் ஓம் பிர்லா கூறியும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தங்களின் கோரிக்கையை வலியுறுத்தினர். இதனால், அவை நடவடிக்கைகள் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. ஒரு மணி நேர ஒத்திவைப்புக்கு பின்னர் மக்களவையில் அவை நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கின.

மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசுகையில்,

"இந்திய ஒற்றுமை யாத்திரையின் (பாரத் ஜோடோ யாத்ரா) போது நாங்கள் நாடெங்கிலும் உள்ள மக்களின் குரல்களைக் கேட்டோம், யாத்திரையில் தொடக்கத்தில் சிறிது கடினமாக இருந்தது. அதே நேரத்தில் யாத்திரையின் போது குழந்தைகள், பெண்கள், முதியவர்களிடம் அவர்களின் குறைகள் குறித்து கேட்டறிந்தோம்.

ஜனாதிபதி உரையில் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் போன்ற வார்த்தைகள் இல்லை. தமிழ்நாடு, கேரளா முதல் இமாச்சலப் பிரதேசம் வரை எங்கும் 'அதானி' என்ற ஒரு பெயரைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நாடு முழுவதும் 'அதானி', 'அதானி', 'அதானி' தான்... அதானி எந்த தொழிலிலும் இறங்குவார், ஆனால் தோல்வியடைய மாட்டார்.. இது எப்படி என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள்.

பிரதமருக்கும் அதானிக்கு என்ன தொடர்ப்பு..? ஒவ்வொரு தொழிலிலும் எப்படி வெற்றி பெறுகிறார். அதானி இப்போது 8-10 துறைகளில் இருக்கிறார் என்றும், 2014 முதல் 2022 வரை 8 பில்லியன் டாலரிலிருந்து 140 பில்லியன் டாலரை எட்டியது எப்படி என்றும் இளைஞர்கள் எங்களிடம் கேள்வி எழுப்பினர்.

பாதுகாப்பு துறையில் எந்த அனுபவமும் இல்லாத அதானிக்கு பல ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் முதல் துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் நாம் நடந்து செல்லும் சாலைகள் வரை அதானி விவகாரம் மட்டுமே பேசப்படுகிறது" என்று அவர் கூறினார்.
 

Share this story