சவுக்கு சங்கருக்கு நிபந்தனையற்ற விடுதலை எப்போது? : தேனி திருமலை பரபரப்பு அறிக்கை.. 

By 
erasai8

தமிழகத்தில், திராவிட மாமணிகள் புரிந்துகொள்ள வேண்டும்' என சமூக ஆர்வலரும் அரசியல் விமர்சகருமான தேனி திருமலை கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

சமூக ஊடக ஆசிரியர் சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து, நீதியை நிலை நாட்டிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியவர். ஏனெனில், இந்தத் தீர்ப்பின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ஊடக ஆசிரியர்களின் எழுத்துரிமையும் பேச்சுரிமையும் பாதுகாக்கப்பட்டுள்ளது.

அதே நேரம், தமிழக காவல் துறையின் அடக்குமுறைக்கு ஒரு முற்றுப்புள்ளியும் வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பின் மூலம் தமிழ் மொழிக்கு ஏற்பட்ட களங்கம் அகற்றப்பட்டுள்ளது. தமிழனின் சுயமாரியாதைக்குப் பாதுகாப்பு கிடைத்துள்ளது. இது தமிழக நீதித்துறையின் வரலாற்றுச் சாதனையாகும். 

கண்ணியமிக்க தீர்ப்புகளை வழங்கி வரும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் மீது திராவிடம் பேசும் சிலர் உச்ச நீதிமன்றத்துக்கு புகார்கள் அனுப்பியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்தப் புகார்கள் மீது உச்ச நீதிமன்றம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காது என்றே நினைக்கிறேன். ஏனெனில், நேர்மையும் உண்மையும் துணிச்சலும் மிக்க ஒரு நீதிபதி மீது பொய்யான புகார்கள் வைக்கப்படுவதை உச்ச நீதிமன்றம் எதற்காக பரிசீலிக்க வேண்டும்? 

உச்ச நீதிமன்றத்தின் அதிகார உச்சத்தைப் பற்றித் தெரியாத கோழைகளின் புகார்களை உச்ச நீதிமன்றம் பரிசீலிக்க எந்த வாய்ப்பும் இல்லை என்பதை திராவிட விசுவாசிகள் புரிந்து கொள்ளவேண்டும்; இது போன்ற புகார்களை அளிப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை உச்ச நீதிமன்றம் எப்படி தெரிந்து வைக்காமல் இருக்க முடியும்?

இனி திராவிடம் பேசி யாரையும் எளிதில் ஏமாற்றவும் முடியாது; இனி யாரும் ஏமாறவும் மாட்டார்கள் என்பதை திராவிட மாமணிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

சமூக ஊடக ஆசிரியர்கள் சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஆகியோரை எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் என்ற, நான் ஏற்கனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால் அவர்கள் அதைக் கண்டு கொள்ளவில்லை; இருப்பினும் நீதி மன்றம் அதற்கான நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது. 

எனவே, இனியாவது முதல்வர் அவர்கள் சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஆகியோர் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வழி வகை செய்து, அவர்களுக்கு நிபந்தனையற்ற விடுதலை வழங்க உத்தரவு வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியா ஒரு ஜனநாயக நாடு; இங்கே ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பேச்சுரிமையும் எழுத்துரிமையும் உண்டு; அதே நேரம் ஊடக ஆசிரியர்கள் பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும்போது, அதில் பாதிக்கப்பட்டவர்களால் அவர்களுக்கு மிரட்டல்கள் வருவது இயற்கை. ஆனால் தமிழக அரசு, ஊடக ஆசிரியர்களைக் காப்பாற்றுவதை விட்டு விட்டு, அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது, வேலியே பயிரை மேய்ந்த கதையாகி விட்டது.

எழுத்தாற்றலும், பேச்சாற்றலும் மிக்க தலைவர்களால் உருவாக்கப்பட்ட கட்சியே திமுக என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மறந்துவிடக்கூடாது. எனவே, ஊடக ஆசிரியர்கள் மீது நடத்தப்படும் இது போன்ற அடக்கு முறை சம்பவங்கள் வருங்காலங்களில் ஏற்படாதவாறு சட்டரீதியான பாதுகாப்பு கிடைப்பதற்குரிய திட்டங்களை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்பதே தமிழக எழுத்துலகவாதிகளின் ஏகோபித்த விருப்பமும் கோரிக்கையும் ஆகும். 

ஊடக ஆசிரியர்கள் சவுக்கு சங்கர்,பெலிக்ஸ் ஆகியோரை நீதிமன்றம் விடுதலை செய்வதற்கு முன்னதாகவே தமிழக அரசு அவர்களை விடுதலை செய்து அறிவித்தால், அதுவே திமுக ஆட்சிக்கும் தமிழக முதல்வருக்கும் கிடைக்கும் மிகப் பெரிய பெருமை என்பதை யாரும் மறுக்க முடியாது' என சமூக ஆர்வலரும் அரசியல் விமர்சகருமான தேனி திருமலை தெரிவித்துள்ளார்.

Share this story