அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்துவது எப்போது? : முதல்வருக்கு கோரிக்கை..

By 
erasai4

'அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு, தமிழக அரசு ஓய்வூதியத்தை உயர்த்துவது எப்போது' என சமூக ஆர்வலரும் தமிழறிஞருமான கவிஞர் அ.திருமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது :

தமிழ்மொழிக்கு மூலதனமாக விளக்கக் கூடியவர்கள் தமிழறிஞர்களும் எழுத்தாளர்களும் என்பதை யாரும் மறுக்க முடியாது;

கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், செய்திகள் இவற்றை எழுதக் கூடியவர்கள், தமிழ் மொழியை வளர்ப்பதில் முதலிடத்தில் இருக்கிறார்கள்; இவர்களில் சிறந்தவர்களை தமிழறிஞர்கள் என்று அழைக்கிறோம்.

இப்படிப்பட்ட தமிழறிஞர்களில் 60 வயது நிரம்பியவர்களை, அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் என்று பெயர் சூட்டி அவர்களுக்கு மாதம்தோறும் ஓய்வூதியமாக ரூ.4000/= தமிழக அரசு வழங்கி வருகிறது;

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தொடர்ந்து கோரிக்கை வைத்தும் இதுவரை ஓய்வூதியம் உயர்த்தப்படவில்லை;

பல்வேறு உயர்ந்த திட்டங்களை மக்களுக்கு நிறைவேற்றி வரும் தமிழக அரசு, தமிழறிஞர்கள் ஓய்வூதியத்தை உயர்த்துவதில் ஏன் தயக்கம் காட்டுகிறது என்று தெரியவில்லை.

தற்போது வழங்கி வரும் ரூ.4000= என்பது மருத்துவச் செலவுக்கே சரியாகி விடுகிறது. காரணம் மருந்துகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதுதான் என்பதை அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும்;

ரேஷன் பொருட்களை வாங்கினாலும்கூட,  சமையல் செய்வதற்குத் தேவையான மற்ற பொருட்களின் விலை எட்டாத உயரத்துக்குச் சென்றுகொண்டே இருக்கிறது;

எனவே, வயது முதிர்ந்த தமிழறிஞர்கள், சத்தான உணவுகளைக் கூடச் சாப்பிட முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு, மிகுந்த சிரமங்களை அனுபவித்து வருகிறார்கள்.

மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களின் ஓய்வூதியத்தை உயர்த்துவது குறித்து, உடனடியாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு உயர் அலுவலர்களுடன் ஆலோசனை செய்து, விரைவில் ஓய்வூதிய உயர்வு குறித்த நல்ல தகவலை வழங்க வேண்டும் என்று, அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்'  என கவிஞர் அ. திருமலை தெரிவித்துள்ளார்.

Share this story