அரசியல் பரபரப்பு: அமேதி, ரேபரேலியில் வேட்பாளர்கள் யார்.?  காங்கிரஸ் எடுக்கும் முடிவு என்ன.?

By 
amethi

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்களை இன்று (சனிக்கிழமை) மாலை அக்கட்சி அறிவிக்கிறது. இதனால், இந்தத் தொகுதிகளில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க ராகுல், பிரியங்கா காந்தியே வேட்பாளர்கள் அவர்கள் வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னதாக, அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்வார்கள் என்ற ஊக அடிப்படையிலான செய்திகளும் உலாவரத் தொடங்கிவிட்டன.

மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு இன்று மாலை முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது. காங்கிரஸ் கட்சி இதுவரை 317 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்நிலையில், உ.பி.,யின் அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் வேட்பாளர்களை இறுதி செய்ய இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

அமேதியில் போட்டி பற்றிய அத்தனை கேள்விகளுக்கும் இதுவரை ராகுல் காந்தி ‘கட்சி மேலிட முடிவுக்குக் கட்டுப்படுவேன்’ என்று மட்டுமே பதில் கூறியுள்ளார். இதனால் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தின் அறிவிப்பு எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் அமேதியில் ராகுல் காந்தி மீண்டும் களம் காண்பாரா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இந்தச் சூழலில் தான்  அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள். அமேதியில் மீண்டும் ராகுல் போட்டியிடலாம் என்றே பரவலாகக் கூறப்படுகிறது. பிரியங்கா காந்தி ரேபரேலி வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அது அவரது தேர்தல் அரசியல் கணக்கை துவக்குவதாக அமையும்.

இம்முறை காங்கிரஸ் கட்சி, மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள இருப்பதால் அதற்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் கணிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அமேதி, ரேபரேலி தொகுதிக்கான வேட்பாளர்களை தெரிந்துகொள்வதற்கு இன்னும் சில நாட்கள் காத்திருங்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.

Share this story