4 கோடி ரூபாய் யாருடையது.? போலீஸ் விசாரணையில் நயினார் நாகேந்திரன் உறவினர் வாக்குமூலம்..

By 
nynar1

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலில் பாஜக சார்பாக நெல்லை தொகுதியில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் போட்டியிட்டார்.

இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக தாம்பரம் ரயில் நிலையத்தில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது. இந்த பணம் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தேர்தல் செலவுக்காகவும், வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதற்காகவும் என தகவல் வெளியானது.

இதனையடுத்து இந்த பணம் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தாம்பரம் போலீசார் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் விசாரணைக்கு ஆஜராக 10 நாட்கள் அவகாசம் கேட்டிருந்தார். இந்த சூழ்நிலையில், நேற்று காலை நயினார் நாகேந்திரன் உறவினர் நிறுவனத்தில் பணிபுரியும் ஆசைத்தம்பி,ஜெய்சங்கர் ஆகிய இருவரும் போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜராகினர். 

இதனை தொடர்ந்து நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி தனது வாக்குமூலத்தை எழுத்து மூலமாக அளித்தார். அதில், காவல் உதவி ஆணையர் நெல்சனை மற்றும் ஆய்வாளர் பால முரளி சுந்தரம் ஆகியோர் முன்னிலையில் ஆஜராகினர். அப்போது 50க்கும் மேற்பட்ட கேள்விகள் முருகனிடம் கேட்கப்பட்டது.

அப்போது 4 கோடி ரூபாய் யாருடைய பணம், எங்கிருந்து எங்கே கொண்டு செல்லப்படுகிறது. நயினார் நாகேந்திரன் உடன் உள்ள தொடர்பு.? யாருக்காக பணம் கொண்டு செல்லப்பட்டது. தங்களது பணியாளர்களை எதற்காக அனுப்பிவைத்தீர்கள் என்பன உள்ளிட்ட பல கேள்விகள் கேட்கப்பட்டது.

இதற்கு நயினார் நாகேந்திரன் உதவியாளர் கேட்டுக்கொண்டதையடுத்து ஆசை தம்பி,  ஜெய்சங்கர் இருவரையும் தான் அனுப்பி வைத்ததாகவும் ஆனால் பணம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது எனவும் தனது முருகன் வாக்குமூலத்தை எழுத்து மூலமாக அளித்து சென்றுள்ளார். இதனிடையே நயினார் நாகேந்திரனுக்கு இரண்டாவது முறையாக சம்மன் அளிக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this story