நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி.?: ஓபிஎஸ் தகவல்..

By 
jijij

பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று தமிழ்நாடு வந்தார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் மோடி, திருச்சியில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ரூ. 19,850 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து, இத்துறைகளில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

முன்னதாக, பிரதமர் மோடியை விமான நிலையத்தில் சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் அனுமதி கேட்டிருந்தார். அந்த வகையில், அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து  பிரதமரை  சந்தித்து நேற்று ஓபிஎஸ் பேசினார்.

பிரதமர் மோடியுடனான இந்த சந்திப்பு குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து ஓபிஎஸ் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடியுடனான சந்திப்பில் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டிருந்தேன். அதன்படி, அவரை சந்தித்து வாழ்த்து கடிதம் மட்டுமே அளித்தேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே. பிரதமரை மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் டெல்லிக்கு சென்று அவரை சந்திப்பேன்.” என்றார்.

“எடப்பாடி பழனிசாமி தொடர்பான ரகசியங்களை பொது வெளியில் இப்போது சொல்ல முடியாது. காலம் வரும் போது அதை வெளியிடுவேன். உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன். அதிமுகவை மீட்டெடுப்பதற்கான போராட்டம் தொடரும்.” என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக தகவல் தெரிவித்தார். “நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்று 10 ஆண்டு காலத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். உலக நாடுகள் நம் இந்தியாவின் முன்னேற்றத்தை கண்டு பிரம்மித்து இருக்கிறது. பாஜகவுடன் இணைந்து பணியாற்ற நல்ல சூழல் உள்ளது.” என்றும் ஓபிஎஸ் கூறினார்.

சசிகலா விரும்பினால் அவரையும் சந்திப்பதாக தெரிவித்த ஓபிஎஸ், “கொடநாடு சம்பவம் நடைபெற்ற போது, நாங்கள் இபிஎஸ் உடன் இல்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.” என வலியுறுத்தினார்.

Share this story