அதிமுகவில் இணைகிறேனா?: காயத்ரி ரகுராம் விளக்கம்..

By 
gayathri2

பாஜகவில் இருந்து விலகிய நடிகைகள் காயத்ரி ரகுராம், கெளதமி ஆகியோர் அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜக கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவர் பொறுப்பில் இருந்த காயத்ரி ரகுராம் மாநிலத் தலைவர் அண்ணாமலையுடனான மோதம் போக்கு காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதன்பிறகு, அண்ணாமலையை தொடர்ந்து அவர் காட்டமாக விமர்சித்து வருகிறார். அண்ணாமலை எந்த விஷயம் செய்தாலும், உடனடியாக அதற்கு காயத்ரி ரகுராம் எதிர்வினையாற்றி விடுவார்.

முதலில் அண்ணாமலையை மட்டுமே விமர்சித்து வந்த காயத்ரி ரகுராம், தற்போது பாஜகவையும் விமர்சித்து வருகிறார். விசிகவுடன் கடுமையான மோதல் போக்கை கையாண்ட அவர், தற்போது அக்கட்சியுடன் இணக்கமான போக்கை கையாள்கிறார். திமுகவையும் விமர்சிப்பதில்லை. இதுகுறித்து விசாரிக்கையில், அவர் அதிமுகவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல், அழகப்பன் என்பவர் தன்னிடம் இருந்து சொத்து, பணம், உள்ளிட்டவற்றை மோசடி செய்ததாகவும், அவருக்கு பாஜவின் மூத்த நிர்வாகிகள் சிலர் துணையாக இருப்பதாகவும் குற்றம் சாட்டி அக்கட்சியில் இருந்து நடிகை கெளதமி விலகியுள்ளார். மேலும், பாஜகவினர் தமது பிரச்சினையில் உதவவில்லை என சுட்டிக்காட்டிய கெளதமி, தமது முதல்வர் மீது நம்பிக்கை உள்ளதாக தெரிவித்திருந்தார்.

எனவே, அவர் திமுகவில் இணைய வாய்ப்புள்ளதாக சில பேச்சுகள் எழுந்தன. ஆனால், நடிகைகள் காயத்ரி ரகுராம், கெளதமி ஆகியோர் அதிமுகவில் இணையவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் இருவர் தரப்பிலுமே திமுகவில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும், அது கைகூடவில்லை என்பதால் இருவருமே அதிமுகவில்  இணைய முடிவெடுத்திருப்பதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

அதேசமயம், கொள்கை சார்ந்து இருவருமே திமுகவில் செயல்பட முடியாது என்பதால், அதிமுகதான் அவர்களுக்கான சாய்ஸாக இருக்கும் என்று கருதியே அவர்கள் இம்முடிவை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், அந்த தகவலை மறுத்துள்ள காயத்ரி ரகுராம், “நானும் அண்ணாமலையும் நாங்கள் இருவரும் ஒன்றாக அதிமுகவில் இணைகிறோம்.” என தனது எக்ஸ் பக்கத்தில் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

Share this story