யார் முதுகிலும் குத்தவோ, மிரட்டவோ மாட்டேன் : கர்நாடகா காங். தலைவர் பேச்சு

tks6

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து முதல்-மந்திரி பதவிக்கு கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா, மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.

இந்தநிலையில், காங்கிரஸ் மேலிடத்தின் அழைப்பின்பேரில் சித்தராமையா நேற்று மதியம் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் அவரது மகன் யதீந்திரா மற்றும் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட சில எம்.எல்.ஏ.க்களும் சென்றனர். அதுபோல் டி.கே.சிவக்குமாருக்கும் டெல்லி வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் இரவு 7.30 மணி அளவில் பெங்களூருவில் இருந்து விமானத்தில் டெல்லி செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் டெல்லி செல்லும் முடிவை திடீரென ரத்து செய்தார்.

சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்கும் என்று உறுதியாகி இருப்பதாகவும், இதனால் டி.கே.சிவக்குமார் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், அதனாலேயே அவர் டெல்லி செல்வதை தவிர்த்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

இதை தொடர்ந்து டெல்லி மேலிட தலைவர்கள் டி.கே.சிவக்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். டி.கே.சிவக்குமாரிடம் போனில் பேசிய பிரியங்கா காந்தி பேச்சுவார்த்தைக்காக டெல்லி வருமாறு அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று டி.கே.சிவக்குமார் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார்.

இன்று பிற்பகலில் டி.கே.சிவக்குமார் காங்கிரஸ் கட்சி தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். முன்னதாக பெங்களூரு விமான நிலையத்தில் டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சி எனக்கு பலத்தை அளித்துள்ளது, மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமையாக உள்ளோம். காங்கிரஸ் என்னும் வீட்டில் நானும் ஒரு பகுதி. யார் முதுகிலும் நான் குத்தமாட்டேன். யாரையும் மிரட்ட மாட்டேன். காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்த நான் விரும்பவில்லை. என்னை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நான் மாநில தலைவராக ஒரு பொறுப்பை பெற்றிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

டெல்லியில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகிய இருவரிடமும் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள். அதன்பின்னர், காங்கிரஸ் மேலிடம் புதிய முதல்-மந்திரியை அறிவித்து, பதவி ஏற்பு விழாவை வருகிற 18-ந் தேதி நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

 

Share this story