ரூ.1000 பிச்சை போட்டால் ஓட்டுப்போட்டு விடுவார்களா?: திமுக மீது குஷ்பு காட்டம்..
 

By 
kushboo11

சென்னை செங்குன்றத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற குஷ்பு, தாய்மார்களுக்கு மாதம் ரூ.1000 பிச்சை போட்டால் ஓட்டுப்போட்டு விடுவார்களா என கேள்வி எழுப்பினார். திமுக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை இவ்வாறு விமர்சித்து பேசிய குஷ்புவின் கருத்துக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

திமுகவினர் நடிகை குஷ்புவை சரமாரியாக தாக்கி பேசி வருகின்றனர். குஷ்புவும் அவர்களுக்கு சலைக்காமல் பதில் கூறி தனது கருத்தை நியாயப்படுத்த முயற்சித்து வருகிறார். மேலும், தன்னுடைய சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்க குஷ்பு மறுப்பு தெரிவித்துள்ளார். பல்வேறு பிரச்சனைகளை திசை திருப்ப திமுகவினர் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால், திமுகவினருக்கும் நடிகை குஷ்புவுக்கும் இடையே சமூக வலைதளங்களில் கடுமையான மோதல் போக்கு நிலவுகிறது. இந்த நிலையில்,திமுக பொய்களின் குடோனாக இருக்கிறது என நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு காட்டம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து குஷ்பு தனது எக்ஸ் பக்கத்தில், “உண்மை வெளியே வருவதற்குள் ஒரு பொய்யானது உலகம் முழுவதும் சுற்றி விடுகிறது. உண்மையை மறைக்கவும், பொய்யான செய்திகளைப் பரப்புவதிலும் திமுக எவ்வளவு மும்முரமாக இருக்கிறது என்பதை நான் பார்க்கிறேன். இது அவர்களின் டிஎன்ஏவில் உள்ளது.

அமைச்சர்கள் முதல் கடைசி கேடர் வரை அனைவரும் தங்களை காப்பாற்றுவதற்காக திரிக்கப்பட்ட செய்தியை பரப்புவதில் மும்முரமாக உள்ளனர். திமுகவின் முக்கிய அடித்தளமாக சுய மரியாதை இருந்தது, ஆனால், இன்று பொய், பித்தலாட்டம் என்று அக்கட்சி மாறிப்போயுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக, தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஆட்சியின் கீழ் தமிழகத்தில் 11,306 கிலோ போதை மருந்துகள் தமிழ்நாட்டில் சப்ளை செய்யப்பட்டுள்ளன. போதை மருந்து மாஃபியா தலைவர் அவர்களது கட்சிக்காரராக இருக்கிறார்.

50 கிலோ போதைப்பொருளின் மதிப்பு ரூ.2000 கோடி என்றால், 11,306 கிலோ போதைப்பொருளின் மதிப்பு எவ்வளவு என்று கற்பனை செய்து பாருங்கள். 2023ஆம் ஆண்டு ஏப்ரலில் டாஸ்மாக் வருவாய் ரூ.44,098.56 கோடியாக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரம் இன்னும் வரவில்லை.

நம் மாநிலப் பெண்களுக்கு வாழ்க்கை சவால்களை முறியடிக்க வாழ்க்கையில் ஸ்திரத்தன்மையும் கண்ணியமும் தேவை. டாஸ்மாக் மற்றும் போதைப்பொருள் மூலம் உங்களுக்கு கிடைக்கும் பல லட்சம் கோடிகள் கமிஷனை மறைக்க 1000 ரூபாய் கொடுக்கிறீர்கள். டாஸ்மாக் கடைகளை குறைப்பதாக கூறிய உங்களின் வாக்குறுதி பொய்யாகவும், கேலிக்கூத்தாகவும் உள்ளது. அது இன்று அம்பலமாகியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் முதல்வராக முதல் கையெழுத்து மதுவிலக்கு என்று கூறியிருந்தார், அது என்ன ஆனது? டாஸ்மாக்கினால் பெண்கள் படும் இன்னல்கள் ஏராளம். குடித்துவிட்டு வீட்டுக்குச் செல்லும் ஆண்கள் மூலம், உடல் ரீதியாகவும், வாய்மொழியாகவும், பாலியல் ரீதியாகவும் பெண்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர். உங்களது தனிப்பட்ட லாபத்திற்காக இதெல்லாம் உங்கள் கண்களுக்கு தெரிவதில்லை என்று நினைக்கிறேன்.

நான் எப்போதும் ஒவ்வொரு கட்டத்திலும் பெண்களுடன் நிற்கிறேன். எப்போதும் நிற்பேன். தி.மு.க.வுக்கு வேலை கொடுத்ததில் மகிழ்ச்சி. ஒரு பெண்ணை எப்படி மதிக்க வேண்டும் என்பதை திமுக எனக்குக் கற்றுக் கொடுப்பதுதான் ஆச்சரியாக உள்ளது. எனது பழைய ட்வீட்கள் அனைத்தும் இங்கே கிடக்கின்றன. உங்கள் சொந்த தோல்விகளை மறைக்க கடந்த காலத்திற்கு நீங்கள் செல்கிறீர்கள். உங்களுக்கு வாழ்த்துக்கள். உங்களிடம் சுயமரியாதை இருந்தால் வேறு வேலையை போய் பாருங்கள்.” இவ்வாறு குஷ்பு பதிவிட்டுள்ளார்.

Share this story